தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு இடங்களில் சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

2 mins read
2924b089-2299-4334-88e9-b5127373d550
மாணவர் ஒருவர், சுவரில் வாசகங்களை எழுதுகிறார். ‘இது எங்களுடைய சுதந்திர நாள்’ என்று ஒரு வாசகம் தெரிவிக்கிறது. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷில் அண்மைய சம்பவங்களாக மேலும் இரண்டு இடங்களில் சிறைகளை உடைத்துக் கொண்டு ஏராளமான கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

ஷேக் ஹசினா பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டில் சட்ட, ஒழுங்கை நிலைநாட்ட கடுமையாகப் போராடி வருகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜமாபூர் சிறையில் சிறைக் காவலர்களை கைதிகள் தாக்கியதால் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரி அபு ஃபாடா ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.

“இரும்புத் தடி, கூரான ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் எங்களைத் தாக்கினர். அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அதன் பிறகு 600 கைதிகளை விடுவிக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

“நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று. குறைந்தது ஆறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 6ஆம் தேதி டாக்காவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காஷிம்பூரில் கடுமையானப் பாதுகாப்புக் கொண்ட சிறையிலிருந்து கைதிகள் தப்ப முயற்சி செய்தபோது ஆறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதன் அதிகாரி லுட்ஃபார் ரஹ்மான் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது 203 கைதிகள் தப்பியிருக்கலாம் என்றார் அவர்.

கடந்த ஜூலை மாதம் மத்திய மாவட்டமான நர்சிங்டியில் உள்ள சிறையிலிருந்து 800க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர். பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகிய ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஷெர்பூரில் உள்ள சிறையிலிருந்து 500க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்