காஸா பள்ளி மீது தாக்குதல் நடத்தி 93 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: இஸ்ரேல் மீதான சினம் அதிகரிப்பு

2 mins read
2a37e7fe-0d80-45c1-abc1-3a6049eb048c
பள்ளிக்கூட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைத்து கதறி அழும் பெண்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: காஸாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களுக்கு புகலிடமாக விளங்கிய பள்ளியின் மீது இஸ்ரேல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) தாக்குதல் நடத்தியது.

இதில் 93 பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலின் இந்தச் செயலை அனைத்துலக நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால், இஸ்ரேல் தான் அங்கிருக்கும் ஹமாஸ் போராளிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்ய முடியவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், 93 பேர் கொல்லப்பட்டனர் என்பது உண்மை எனில் கடந்த 10 மாதங்களாக நடந்துவரும் போரில் ஒரே நாளில் இத்தனை பேர் கொல்லப்பட்டது இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்படுகிறது.

அல்-தபியீன் சமயப் பள்ளி, பள்ளிவாசல் ஆகியவை தாக்கப்பட்டது தொடர்பில் மத்திய கிழக்கின் பல பகுதிகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அத்துடன், பல நாள்களாக எதிர்பார்த்த போர்நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு, தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கும்படி அனைத்துலக பேராளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் காலைநேரப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும்போது மூன்று ஏவுகணைகள் காஸாவில் உள்ள அந்த வளாகத்தை தாக்கியதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 11 சிறுவர்கள், மாதர் அறுவர் ஆகியோர் கொல்லப்பட்ட 93 பேரில் அடங்குவர் என்று குடிமைத் தற்காப்பு அமைப்பின் பேச்சாளர் மஹ்முத் பசால் சொன்னார்.

அத்துடன், அங்கு அடையாளம் காண முடியாத பல உடற்பாகங்கள் இருந்ததாக அவர் விளக்கினார்.

“அவர்கள் தொழுகையில் இருக்கும்போது ஏவுகணைத் தாக்குதல் நடந்தது,” என்று இறந்தவர் ஒருவரின் உடலுக்கு அருகில் அழுது கொண்டிருந்த மாது கூறினார்.

தாக்குதல் பற்றிக் கூறிய இஸ்ரேலிய ராணுவம், தனது உளவுத் துறை தகவலின்படி, தாக்குதலில் அங்கிருந்த குறைந்தது 19 ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்