தென்னாப்பிரிக்க அழகிப் போட்டி: முதன்முறையாக காது கேட்காத பெண் வெற்றி

1 mins read
1d2985fd-5aeb-4cb4-81d0-3dea4498f7b8
வாகை சூடிய மியா லெ ரூக்ஸ்  - படம்: nowinsa.co.za / இணையம்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவுக்கான ‘மிஸ் சவுத் ஆப்பிரிக்கா’ அழகிப் போட்டியில் காது கேட்காத மியா லெ ரூக்ஸ் எனும் பெண் வாகை சூடியுள்ளார்.

இவர், இப்பட்டத்தை வென்றுள்ள முதல் காது கேட்காத பெண் ஆவார்.

நிதி நிலவரத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளர்கள் ஆகியோருக்குத் தான் உதவ எண்ணம் கொண்டுள்ளதாக லெ ரூக்ஸ் கூறினார். தனது வெற்றி, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தன்னைப் போன்றோர் தங்களின் மிகப் பெரிய கனவுகளை நனவாக்க ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் 28 வயது லெ ரூக்ஸ் வெற்றி உரையில் சொன்னார்.

ஒரு வயதில் காது கேட்காமல் போன இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘கொஹ்லியர் இம்பிளான்ட்’ சிகிச்சை மூலம் ஒலிகளை அறிய முடிகிறது. தான் பேசத் தொடங்க, ஈராண்டுகளுக்குப் பேச்சு சிகிச்சை பெறவேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான தென்னாப்பிரிக்க அழகிப் போட்டி சரச்சையை ஏற்படுத்தியிருந்தது. இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்த சிடிம்மா அடெட்‌ஷினா எனும் 23 வயது பெண், முன்னதாக போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

நைஜீரியா, மொஸாம்பிக் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பெற்றோருக்குப் பிறந்த அவரின் வம்சாவளி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்