வாஷிங்டன்: சிகாகோ நகரில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் அமெரிக்காவின் முன்னாள், இந்நாள் அதிபர்கள் மூவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அங்கீகரிக்க அவர்கள் ஒன்றுகூடுவார்கள் என்று தெரிகிறது.
யுனைடெட் சென்டரில் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளான ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார் என்றும் அதற்கு அடுத்த நாளில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மற்றொரு முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் அவரது மனைவி ஹில்லரி கிளிண்டனும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என்று அதுபற்றி அறிந்த இருவர் ஊடகங்களிடம் கூறினர்.
திரு. ஒபாமா அதிபராக இருந்தபோது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் திருவாட்டி ஹில்லரி.
மேலும், 2016 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹில்லாரி களம் இறங்கினார்.
மாநாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி உரையாற்ற தற்போதைய துணை அதிபர் வேட்பாளரான டிம் வால்ஸுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டின் இறுதி நாளான ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிபர் வேட்பாளர் நியமனத்தை திருவாட்டி கமலா ஹாரிஸ் சடங்குபூர்வமாக ஏற்றுக்கொள்வார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தகவல்கள் அனைத்தும் உறுதி செய்யப்படவில்லை. காரணம், மாநாட்டின் பேச்சாளர் பட்டியல் முறைப்படி இன்னும் வெளியிடப்படவில்லை.
இருந்தபோதிலும், கட்சியில் வளர்ந்து வரும் நட்சத்திரத் தலைவருக்கான அங்கீகாரத்துடன் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற எவரும் அடையாளம் காணப்படவில்லை.
அதிபர் வேட்பாளர் என்னும் பொறுப்பை அதிபர் ஜோ பைடனிடம் இருந்து பெற்ற பின்னர் திருவாட்டி கமலா ஹாரிஸின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்து வருகிறது.
பல மில்லியன் டாலர் நன்கொடைகளைத் திரட்டுவதுடன் கட்சியின் பிரசாரப் பேரணிகளில் கலந்துகொள்ள பல்லாயிரம் பேரை அவர் ஈர்த்து வருகிறார்.