குரங்கம்மையைக் கட்டுப்படுத்த காசில்லாத நிலை; சிரமத்தில் தவிக்கும் ஏழை நாடுகள்

குரங்கம்மையைக் கட்டுப்படுத்த காசில்லாத நிலை; சிரமத்தில் தவிக்கும் ஏழை நாடுகள்

2 mins read
1e67ca0a-28b4-4157-ac1d-e0af3c62b783
காங்கோ குடியரசின் வடக்கு நகரான கோமாவில் உள்ள குரங்கம்மை சிகிச்சை நிலையத்தில் நோயாளிகளுக்கு அறிவுரை கூறும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோயை அனைத்துலக நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், நோய்ப் பரவலைச் சமாளிப்பதில் நிதிச் சிரமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

காங்கோ குடியரசிலும் அதன் அண்டை நாடுகளிலும் குரங்கம்மைப் பரவாது தடுக்க கண்காணிப்புப் பிரசாரங்கள், பொது சுகாதார விழிப்புணர்வு, தடுப்பூசி போன்றவை செலவு மிகுந்தவை.

குறிப்பாக, நோய் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏழை நாடுகளுக்கு அது பெருஞ்செலவு ஆகும்.

நெருக்கடியைச் சமாளிக்க, உலக சுகாதார நிறுவனம் இதுவரை தமது தற்செயல் நிதியில் இருந்து US$1.45 மில்லியன் (S$1.91 மில்லியன்) வழங்கி இருக்கிறது. அதேவேளை, ஆப்பிரிக்க ஒன்றியம் US$10.4 மில்லியன் வழங்க அனுமதித்து உள்ளது.

ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்திற்கு (ஆப்பிரிக்கா சிடிசி) கொவிட்-19 பெருந்தொற்றைச் சமாளிக்க ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அதனை ஒன்றியம் வழங்குகிறது.

பெருமளவு தொகையை தடுப்பூசிக்கான கூட்டமைப்பான ‘கேவி’ வழங்கக்கூடும். தடுப்பூசிக்கான புதிய US$500 மில்லியன் அவசரகால நிதியைத் தம்மால் திரட்ட இயலும் என்று அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

இருப்பினும், குரங்கம்மைத் தொற்றைச் சமாளிக்க US$4 பில்லியன் நிதி தேவைப்படும் என்று ஆப்பிரிக்கா சிடிசியின் தலைமை இயக்குநர் ஜீன் கசேயா மதிப்பிட்டுள்ளார். இதுவரை திரண்டுள்ள, வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ள நிதி இந்த மதிப்பீட்டுத் தொகையில் இருந்து சொற்பமாகத் தோன்றுகிறது.

குரங்கம்மை தொற்று அதிகரித்து இருக்கும் காங்கோ குடியரசு ஏறத்தாழ மேற்கு ஐரோப்பா அளவுக்கு நிலப்பரப்பைக் கொண்டது.

ஓயாத பூசல்கள், வாட்டி வதைக்கும் பஞ்சம், பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் அந்த நாடு பல்லாண்டுகளாகச் சிதைந்து உள்ளது.

ஏறத்தாழ 99 மில்லியன் காங்கோ மக்கள்தொகையில் 4.2 மில்லியன் பேர் சொந்த நாட்டுக்குள்ளேயே ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயர்ந்து உள்ளனர். அவர்களில் பலர் நெரிசலான முகாம்களில் தங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், நோய்ப் பரவலைத் தடுப்பது என்பது அந்த நாட்டுக்குப் பெரும் சவாலான ஒன்று.

இந்த ஆண்டு மட்டும் 15,700 பேரை குரங்கம்மை தொற்றியதாகவும் 550 பேர் அந்தத் தொற்றால் இறந்துவிட்டதாகவும் காங்கோ அரசாங்கம் தெரிவித்து உள்ளது. மேலும் நாட்டில் உள்ள எல்லா 26 மாநிலங்களிலும் தொற்று பரவிவிட்டதாகவும் அது கூறியுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பதோடு குரங்கம்மை கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவர்கள். இந்நிலையில், வேகமாகப் பரவக்கூடிய புதிய வகைக் கிருமி உருவாகலாம் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்