79வது சுதந்திர தினத்தை புதிய தலைநகரில் எளிமையாகக் கொண்டாடியது இந்தோனீசியா

2 mins read
fc11371f-30b6-49ac-a792-689ca0ef7c74
இந்தோனீசியாவின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) புதிய தலைநகரான நுசந்தாராவில் நடந்த கொண்டாட்ட அங்கத்தில் மரக்கழிகளின் மேல் நின்று நாட்டியம் ஆடும் கலைஞர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

நுசந்தாரா: இந்தோனீசியாவின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஆடம்பரம் இல்லாமல் புதிய தலைநகரான நுசந்தாராவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) கொண்டாடப்பட்டது.

இந்தோனீசியா தனது புதிய தலைநகரை கலிமந்தானில் நுசந்தாரா என்ற பெயரில் உருவாக்கி வருகிறது.

அந்த நகரத்தின் கட்டுமானப் பணிகள் பல பிரச்சினைகள், காரணமாக காலதாமதமாகி வருகிறது.

தலைநகரத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்னும் முடிவுறாமல் இருப்பதால் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஆடம்பரமின்றி நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிபர் பதவிக்காலம் முடிவுறும் திரு ஜோக்கோ விடோடோவின் பெருமையைக் கூறும் திட்டமான இது பல்வேறு கட்டுமானப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கொள்ளைநோய் காரணமான காலதாமதம், நிதிப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடு இல்லாமை பிரச்சினைகளாக உருவெடுத்தன.

இவற்றுடன், அண்மையில் திட்டத்தை முடிக்க பணித்த முக்கிய அதிகாரிகளின் பதவி விலகல் காரணமாக தலைநகர நிர்மாணம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜப்பானிய ஆட்சியிலிருந்து இந்தோனீசியா 1945ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் 1,300 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

தங்குமிட வசதி, உணவு வசதி போன்றவை குறைவாக இருந்ததால் முன்னர் விருந்தினர்களாக அழைக்கப்பட இருந்த 8,000 பேருக்குப் பதிலாக 1,300 பேரே இறுதியில் அழைக்கப்பட்டனர் என்று திரு ஜோக்கோவி என அழைக்கப்படும் அதிபர் இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

பல கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் பின்னணியில் உள்ளூர் சமூகங்கள், கட்டுமான ஊழியர்கள் என நூற்றுக்கணக்கான வருகையாளர்கள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

முலியானா என்ற 38 வயது கட்டுமான ஊழியர் கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல குறைவான வசதியே இருந்ததால், அமைச்சு கட்டடம் ஒன்றைக் கட்டும் பணி ஒன்பது மாதங்கள் பிடித்ததாகத் தெரிவித்தார். அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாக திரு ஜோக்கோவி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்