மரம் விழுந்து ஆடவர் மரணம்; $268,000 இழப்பீடு வழங்க நகரமன்றத்துக்கு உத்தரவு

மரம் விழுந்து ஆடவர் மரணம்; $268,000 இழப்பீடு வழங்க நகரமன்றத்துக்கு உத்தரவு

1 mins read
0b60be8e-c299-4037-8685-ebdb7da775d0
சாலையோர மரம் விழுந்து உயிரிழந்த ஆடவரின் பெற்றோருக்கு 824,180 ரிங்கிட் (S$ 268,089) இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோலாலம்பூர் நகரமன்ற மேயருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: சாலையோர மரம் விழுந்து ஆடவர் உயிரிழந்த சம்பவத்துக்கு கோலாலம்பூர் நகரமன்றத்தின் கவனக்குறைவே காரணம் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) தீர்ப்பளித்துள்ளது.

உயிரிழந்த 30 வயது புன் முன் லாப்பின் பெற்றோருக்கு 824,180 ரிங்கிட் (S$268,089) இழப்பீடு வழங்க நகரமன்ற மேயருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடவரின் பெற்றோரான கூய் லிங் சிம், புன் கோக் ஹோய் ஆகிய இருவரும் தொடர்ந்த வழக்கு தொடர்பில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அடக்கம் செய்வதற்கான செலவாக 26,180 ரிங்கிட், வாழ்வாதார இழப்பீடாக 768,000 ரிங்கிட், மன உளைச்சலுக்காக 30,000 ரிங்கிட் வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி ஜாலான் கூச்சிங்கில் புன் முன் லாப் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் இருந்த மரம் அவர்மீது சாய்ந்தது. அதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கோலாலம்பூர் நகரமன்றம்

அந்த மரம் நகரமன்றத்தின் பராமரிப்பில் இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்தது. மரத்தை முறையாக வெட்டுவதற்கோ அல்லது கண்காணிப்பதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கான எந்தவோர் ஆதாரத்தையும் நகர மன்றம் சமர்ப்பிக்கவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய சட்டபூர்வக் கடமையிலிருந்து நகர மன்றம் தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து கோலாலம்பூர் நகரமன்றம் தற்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்