சோல்: விமானத்திற்குள் பொழுதுபோக்குக்காக திரையிடப்படும் உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு தேவையற்றதாக அல்லது பொருத்தமற்றதாக இருப்பதைத் தடுக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்த கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்கொரியாவில் பதின்ம வயதினர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
“நான் அதைப் பார்க்க வேண்டாம் என்று முயன்றபோதிலும், அந்த வன்முறை மற்றும் ஆபாசமான திரைப்படம் என் கவனத்தை ஈர்த்தது. வேறு வழியின்றி நான் அந்த காட்சிகளைப் பார்க்க வேண்டியதாயிற்று,” என்று உள்துறை, பாதுகாப்பு அமைச்சுகள் நடத்தும் ‘மனு 24’ என்ற இணையத்தளத்தில் நடுநிலைப் பள்ளி மாணவர் என்று கூறிக்கொண்ட மனுதாரர் ஒருவர் எழுதியுள்ளார்.
நான்காம் வகுப்பு படிக்கும் தனது தங்கையும் அந்தக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள திரைகளில் குறிப்பிட்ட வயதினர்களுக்கான உள்ளடக்கங்களை மற்ற பயணிகள் பார்ப்பதைத் தடுக்கும் கட்டாய நடைமுறைகளை நான் முன்மொழிகிறேன்,” என்று அந்த மனுதாரர் எழுதியுள்ளார்.
குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று குழந்தை நலச்சட்டம், இளையர் பாதுகாப்புச் சட்டம் ஆகிய இரண்டுமே வலியுறுத்துவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரர் எந்தத் திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தென்கொரியாவின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான கொரியன் ஏர், ஏசியானா ஏர்லைன்ஸ் ஆகியவை 19 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான உள்ளடக்கங்களை திரையிடுவதில்லை.
மேலும், விமான நிறுவனங்கள் பொதுவாக மிகவும் கொடூரமான அல்லது ஆபாசமான காட்சிகளை நீக்கி அல்லது மாற்றப்பட்ட திரைப்படங்களின் பதிப்புகளையே பயன்படுத்துகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த இரு விமான நிறுவனங்களும் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாரசைட்’ திரைப்படத்தை தங்களது பட்டியலில் இருந்து நீக்கின.
சில வன்முறை, பாலியல் காட்சிகள் இருந்ததன் காரணமாக இந்தத் திரைப்படம் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான திரைப்படமாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

