ஈரான்மீது ஏவுகணைகளை பாய்ச்சி அமெரிக்கா தாக்குதல்

ஈரான்மீது ஏவுகணைகளை பாய்ச்சி அமெரிக்கா தாக்குதல்

2 mins read
f1468afe-4d6d-41a0-98c5-40d5402fcfa4
அமெரிக்க மத்திய தளபத்தியம் வெளியிட்ட இப்படத்தில் ஈரானியப் பகுதிகள்மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: ஈரான், ஏமனில் உள்ள ஹூதி போராளிகளுக்கு எதிராக கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூளுரைத்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஈரான் முழுவதும் உள்ள பல இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இருப்பினும், ஈரானுடன் அரசதந்திரவழியில் பேச்சு நடத்த கதவு திறந்தே இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஈரான் இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போடப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கியது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக ஈரான் கூறியது.

மேலும், அமெரிக்க ஊழியர்கள் பயன்படுத்தும் ராணுவம் அல்லாத கட்டடங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஈரான் எச்சரித்தது.

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல்களை விரிவுபடுத்தி, அந்நாட்டின் எண்ணெய் நிலையமான கார்க் தீவைக் கைப்பற்றத் தரைப்படை அனுப்பி வைக்கப்படும் என்றும் ‘பிகாக்ஸ் மவுண்டன்’ என்று அழைக்கப்படும் ஆழமான நிலத்தடி அணுசக்தி மையத்தின்மீது குண்டுவீசப்படும் என்றும் அண்மையில் அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று பேசிய அவர், புதிய பெரிய அளவிலான தாக்குதல்கள் குறித்துத் தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றார்.

“நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம்,” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான உத்தி என்னவென்று கேட்கப்பட்டதற்கு, “ஒன்று, ராணுவரீதியில் தாக்குதலை இன்னும் அதிகரித்து அவர்களிடம் உள்ள அனைத்தையும் தகர்த்தெறிவது அல்லது புத்திசாலியான அணுகுமுறையாக ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது,” என்று அவர் பதிலளித்தார்.

அதே நாள் பிற்பகுதியில் பேசிய திரு டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஐந்து மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில் இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமையன்று சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்ஈரான் போர்அமெரிக்காஇஸ்ரேல்