ராணுவ அழுத்தங்களைக் குறைத்தால் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்: ஈரான்

ராணுவ அழுத்தங்களைக் குறைத்தால் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும்: ஈரான்

படம: ராய்ட்டர்ஸ்

22 Sep 2026 - 8:27 pm

2 mins read

டெஹ்ரான்: அமெரிக்கா தன் ராணுவ அழுத்தங்களைக் குறைப்பதற்கான தொடக்கக் கட்ட நடவடிக்கைகளை எடுத்தால், அடுத்த ஏழு நாள்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் முன்வந்துள்ளதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) கியோடோ நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, சமரசப் பேச்சாளர்கள் மூலம் இது அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் நியூயார்க்கில் நடைபெறும் ஐநா கூட்டத்தைப் பயன்படுத்தி, சமரசப் பேச்சாளர்களாகச் செயல்படும் நாடுகளுடன் ஆலோசிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஈரானிய அதிபர் அதிபர் மசூத் பெஸஷ்கியான், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இடையே நேரடிச் சந்திப்பு இருக்காது. எனினும், உடன்பாட்டை எட்ட வாய்ப்பிருப்பதாக அதிகாரி குறிப்பிட்டார்.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்க ராணுவ முற்றுகையை விலக்குவது, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது போன்ற முதற்கட்ட நகர்வுகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என ஈரான் எதிர்பார்க்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், வான், கடல்வழி வணிகத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாள்களுக்குள் திறந்து, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஈரான் தயாராக உள்ளது.

ஈரானின் தலைவர் மொஜ்தபா காமெனி, செயலாளர் மொஹ்சன் ரெசாய் ஆகியோர் இந்தப் புதிய முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

போரினால் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அரசதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர அமைதியை ஏற்படுத்த ஈரான் முயன்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்