நியூயார்க்: புதிய பங்காளிகளின் ஆதரவுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா மறுகாப்புறுதி திட்டத்துடன் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
அந்தத் திட்டத்தின்படி அமெரிக்கா அதன் முதலீட்டை S$51.5 பில்லியனுக்கு (US$40 பில்லியன்) உயர்த்தி இரட்டிப்பாக்கியுள்ளது.
இந்த மறுகாப்புறுதியும் பாதுகாப்பு உத்தரவாதமும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை தடையின்றிக் கடந்து செல்லமுடியும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஊட்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) வெளியிடப்பட்ட அறிக்கையில் காப்புறுதி வழங்கும் பெருநிறுவனங்களில் ஏஐஜி, பெர்க்க்ஷையர் ஹதவே ஆகியன அடங்கும்.
உலக எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு அந்த நீரிணை வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. ஆயினும் கடந்த ஐந்து வாரங்களாக நடக்கும் மத்திய கிழக்குப் போரில் அந்தக் கடல் பாதையை ஈரான் சுற்றிவளைத்து தடைகள் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அனைத்துலக மேம்பாட்டு நிதிக் கூட்டமைப்பு கடந்த மாதம் S$25.5 பில்லியன் (US$20 பில்லியன்) நிதியை ஹோர்முஸ் கப்பல் போக்குவரத்து காப்புறுதி திட்டத்துக்கென ஒதுக்கியிருந்தது.
அந்த நிதியை இரட்டிப்பாக்க தற்போது டிராவெல்லர்ஸ், லிபர்டி மியுட்சுவல், ஸ்டார், சிஎன்ஏ உள்ளிட்ட பல முன்னணி நிதி, காப்புறுதி நிறுவனங்கள் அந்தக் கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து மத்திய கிழக்கின் கடல் பாதுகாப்புக்கென உத்தரவாதம் வழங்கியுள்ளன.

