ஹோர்முஸ் நீரிணை என்றேன்றும் எங்களுடையது: ஈரான் சூளுரை

ஹோர்முஸ் நீரிணை என்றேன்றும் எங்களுடையது: ஈரான் சூளுரை

2 mins read
abe95093-3e02-40bd-88c6-98724fd5a2d7
ஈரானில் ஆகஸ்ட் 4ல் நடந்த ஷியா முஸ்லிம் சமய ஊர்வலத்தில் தேசியக் கொடியுடன் பொதுமக்கள். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை என்றென்றும் ஈரானின் சொந்தப் பகுதியாகவே இருக்கும் என்று ஈரானின் வெளியுறவு துணை அமைச்சர் கஸம் கரிபபாடி எகஸ் சமூக ஊடகத் தளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) பதிவிட்டார்.

ஹோர்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதற்குப் பதிலடியாக ஈரானின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

“ஹோர்முஸ் நீரிணை என்றுமே ஈரானின் பகுதி. அது அன்றும், இன்றும் என்றும் ஈரானின் அங்கமாகவே நிலைத்திருக்கும்,” என்று அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்குத் தடை விதித்திருக்கும் அந்நாட்டு அமைச்சரின் பதிவில் வலியுறுத்தப்பட்டது.

ஈரானின் ஆணையின்படியே அந்த நீரிணை திறக்கவும் மூடவும் படும் எனவும் அமைச்சர் கஸம் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்கா ஈரானுடன் போர் தொடங்கிய பிப்ரவரி மாதத்திலிருந்து அந்த நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது. அவ்வப்போது நடந்த சண்டை நிறுத்தத்தினால் அங்கு கப்பல்கள் சென்று வந்தன. இருப்பினும், அது தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அமெரிக்கா அடிக்கடி கூறிவருகிறது.

வெள்ளிக்கிழமை நடந்த அரசியல் கூட்டத்தில் அதிபர் டிரம்ப், போரில் ஈரானை வென்றபிறகு நீரிணை அமெரிக்காவின் பகுதியாகும் என்று கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகு ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி, அதிபர் வேடிக்கையாகப் பேசினார் என்று சொன்னதாக ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ ஊடகம் செய்தி வெளியிட்டது.

கடந்த வாரம் ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடுவதற்கான நிபந்தனைகளை முன்வைத்தார். அவற்றில் போர் முடிவுக்கு வரவேண்டும், ஈரான் மீதான மிரட்டல்கள் நிறுத்தப்படவேண்டும். லெபனான், பாலஸ்தீனம், ஏமன், ஈராக் ஆகிய நாடுகளில் அதன் ஆதரவாளர்களை அமெரிக்கா தாக்குவதை நிறுத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அவற்றில் அடங்கும்.

மேலும் ஈரான் மீதான பொருளியல் தடைகளை நீக்கி, முடக்கப்பட்டுள்ள அதன் நிதியை விடுவித்து, போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீட்டை அது அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்