பங்ளாதேஷில் முக்கிய இஸ்லாமியக் கட்சிக்குத் தடை

1 mins read
முக்கிய இஸ்லாமியக் கட்சியைத் தடை செய்ய நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்டது.
11f20ea6-a033-4483-b348-01edf9245a6f
இரண்டு வாரங்களுக்கு மேல் மாணவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 150க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். - படம்:ராய்ட்டர்ஸ்

பங்ளாதேஷில் அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஆளும் அவாமி லீக் கட்சியின் கூட்டணி அரசாங்கம் போராட்டங்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதன்கிழமை (ஜூலை 31) பிறப்பிக்கப்பட்ட நிர்வாக ஆணையின்படி (எக்சிகியூட்டிவ் ஆர்டர்) ஜமாத் இ இஸ்லாமியக் கட்சியும் அதன் மாணவர் பிரிவும் தடை செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு மேல் மாணவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 150க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, ஜமாத் இ இஸ்லாமியக் கட்சியும் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியும் (பிஎன்பி) ஆர்ப்பாட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தடை நடவடிக்கையை சட்டவிரோதம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், அரசாங்க அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீதும் ஜமாத் இ இஸ்லாமியக் கட்சி மீதும் பழி சுமத்தும் போக்கு என்றும் ஜமாத் கட்சியின் தலைவர் ஷஃபிகூர் ரஹ்மான் கூறினார்.

நாட்டின் நலன் கருதி, தடை நடவடிக்கையை செயல்படுத்த நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று சட்ட, நீதித் துறை, நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சர் அனிசுல் ஹக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மதச்சார்பற்ற அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானது என்ற காரணத்தால் பங்ளாதேஷ் நீதிமன்றம் கடந்த 2013ல் ஜமாத் அமைப்பின் அரசியல் கட்சி தேர்தலில் பங்கேற்கத் தடை விதித்தது.

குறிப்புச் சொற்கள்