பேங்காக்: தாய்லாந்தில் சான்றிதழ் பெற்ற சாலையோர உணவகங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் கண்டுபிடிக்க, புதிய மின்னிலக்கச் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய வர்த்தகங்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் செயல்பாட்டுத் தரத்தை உயர்த்தவும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதி அது.
‘தாய் ஸ்ட்ரீட் கோல்ட் ஸ்டார்’ (Thai Street Gold Star) எனும் அந்தச் செயலி, அத்திட்டத்தில் இணைந்துள்ள உணவகங்கள், பரிந்துரைக்கப்பட்ட உணவுகள், இடங்கள், போக்குவரத்துத் தகவல்கள் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது.
அச்செயலி முதற்கட்டமாக பேங்காக், சோன்புரி மாநிலத்தின் பட்டாயா, சியாங் மாய் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அந்தத் திட்டம் தாய்லாந்தின் சாலையோர உணவு வர்த்தகர்கள், அதிகமான உள்ளூர், அனைத்துலக வாடிக்கையாளர்களைச் சென்றடைய உதவும் என்று அரசாங்கத் துணைப் பேச்சாளர் லலிடா பெர்ஸ்விவாத்தனா தெரிவித்தார்.
அதோடு, அத்துறையை அனைத்துலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கும் அது கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் நப்பின்டோர்ன் ஸ்ரீசன்பாங், ‘தாய்லாந்து உணவு விழா & தாய் ஸ்ட்ரீட் கோல்ட் ஸ்டார்’ எனும் சாலைக் காட்சியில் அந்தச் செயலியைத் தொடங்கிவைத்தார்.
சிறிய, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகம், ‘சுவான் டுசிட்’ பல்கலைக்கழகம், பங்காளி அமைப்புகள் ஆகியவை இணைந்து அத்திட்டத்தை மேற்கொள்கின்றன.
சான்றிதழ் பெற விரும்பும் சாலையோர உணவு வர்த்தகர்கள் மூன்று முக்கிய அம்சங்களில் உள்ள தகுதிநிலைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
உணவுச் சுகாதாரத்தையும் தூய்மையையும் உள்ளடக்கும் பாதுகாப்பு, உணவுகளின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் மதிப்பிடும் சிறப்புத் தன்மை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கவனிப்பை அளவிடும் சேவை ஆகியவை அவை.
அத்திட்டத்தில் இணைந்துள்ள உணவகங்களின்மீது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தாய்லாந்தின் சுற்றுப்பயணச் சந்தையில் வர்த்தகர்கள் மேலும் திறம்படப் போட்டியிட உதவுவதுமே அந்தச் சான்றிதழின் நோக்கம்.

