கோலாலம்பூர்: மலேசியாவின் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் (பிகேஆர்) தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சியை வலுப்படுத்துங்கள் என்று அதன் தலைமைத்துவப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சியை விரிவுபடுத்தி அடுத்த பொதுத்தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்றும் திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் கட்சி ஓர் அரசியல் கட்சி. அது மக்களின் குரலாக இருந்து மாற்றத்திற்குப் போராடும் என்றும் அவர் கூறினார்.
மலேசியப் பிரதமரான திரு அன்வார் தமது கட்சியினருக்கு சனிக்கிழமை (மே 24) ஃபேஸ்புக் பதிவு மூலம் இக்கருத்தைத் தெரிவித்தார்.
“அனைத்து பிகேஆர் தலைவர்கள், உறுப்பினர்கள் தொடர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும், துன்பப்படுபவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும், பலவீனமானவர்களின் பாதுகாவலர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மே 23ஆம் தேதி நடந்த கட்சி மாநாட்டில் அரசாங்க கொள்கைகள் மட்டும் பேசப்படவில்லை, பிகேஆர் கட்சி தொடர்ந்து மக்களின் நம்பிக்கையாக எவ்வாறு இருக்கிறது என்பதை நினைவூட்டியதாகவும் திரு அன்வார் சொன்னார்.
வெறுப்பு அரசியல், வெறுப்புப் பேச்சு, இனவாதம் உள்ளிட்டவற்றுக்கும் பிகேஆர் கட்சி எதிரானது. இவை மக்களைப் பிரிக்கும், நாட்டை வலுவிழக்கச் செய்யும் என்று அவர் சொன்னார்.
“சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்வதில் சிக்கல் வரலாம் ஆனால் அச்சம் இல்லாமல் நேர்மையாகச் செயல்பட வேண்டும். ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டும். நேர்மையாக, வெளிப்படையாகச் செயல்பட வேண்டும்,” என்றும் திரு அன்வார் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், திரு அன்வார், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லிக்கும் தற்போது துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நூருல் இஸாவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இஸா வெற்றி பெற்றார். இந்த உட்கட்சித் தேர்தல் வெள்ளிக்கிழமை (மே 23) நடந்தது.
நூருல் இஸாவுக்கு எதிராக ரஃபிசி ரம்லி போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.