பெட்ரோல் நிரப்பும் வெளிநாட்டுக் கார் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜோகூர் முதல்வர் உத்தரவு

2 mins read
2bac8127-e996-4576-93b8-47216452549e
ஜோகூர் பெட்ரோல் நிலையங்களில் வெளிநாட்டுக் கார்களும் மானியப் பெட்ரோலை நிரப்புவது குறித்து சமூக ஊடகங்களில் பலர் புகார் அளித்துள்ளனர். - கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ்

இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவில் மானிய விலையில் விற்கப்படும் பெட்ரோலை நிரப்பும் வெளிநாட்டுக் கார் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசியாவின் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சை ஜோகூர் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

“மக்கள் எழுப்பும் பல்வேறு பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இத்தகைய விதிமீறல்கள் உள்ளூர் மக்களை அதிகம் பாதிக்கிறது,” என்று திரு ஒன் ஹஃபிஸ் காஸி கூறினார்.

மானிய விலை பெட்ரோலை சாதகமாக்கிக் கொள்வோருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. சந்தேகமின்றி இது நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் ஒரு லிட்டர் ‘RON95’ ரக பெட்ரோல் அரசாங்க மானியத்திற்குப் பிறகு 2.05 ரிங்கிட்டுக்கு (65 சிங்கப்பூர் காசு) விற்கப்படுகிறது. இதனை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் ஜோகூர் பெட்ரோல் நிலையங்களில் வெளிநாட்டுக் கார்களும் மானியப் பெட்ரோலை நிரப்புவது குறித்து சமூக ஊடகங்களில் பலர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், மானிய விலையில் விற்கப்படும் சமையல் எண்ணெய்யும் ‘B40’ குறைந்த வருமானப் பிரிவினருக்கு மட்டும் விற்கப்படுவதை அமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டவர்களின் கைகளுக்குப் போகக் கூடாது என்றும் ஜோகூர் முதல்வர் கூறியுள்ளார்.

ஜோகூர் மக்கள் குறிப்பாக சமூக ஊடகங்களில் பதிவிடும் புகார்களை பட்டியலிட்டபோது திரு ஒன் ஹஃபிஸ் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

தங்களுடைய குறைகள், கவலைகள் புறக்கணிக்கப்படுவதாக உணரும் மக்களிடமிருந்து இன்னும் பல புகார்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைக் கவனித்து தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.

வடிகால் அடைப்பு, உடைந்துபோன சாலை விளக்குகள், மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் உள்ளிட்ட புகார்களும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன என்று முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்