கோலாலம்பூர்: இதுவரை அடையாளம் வெளியிடப்படாத 39 வயது மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் இந்தோனீசியாவில் ஜூலை மாதம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, தனது அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் (MAG) தெரிவித்தது.
முதற்கட்டமாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 1,260 விமானிகளுக்குக் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பரிசோதனையை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் பரிசோதனையை நிறைவு செய்யாத விமானிகள், தகுதிச் சான்றிதழ் பெறும்வரை பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சேவை வழங்கும் ஃபயர்ஃபிளை விமானிகள், அமல் எனப்படும் ஹஜ் பயணத்துக்கான சிறப்பு சேவை விமானிகள் உட்பட குழுமத்தின் அனைத்து விமானிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் விமானப் பணிப்பெண்களுக்கும் இக்கட்டாயப் பரிசோதனை விரிவாக்கப்படும்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் துணை விமானியின் பையிலிருந்து 26 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவரது சிறுநீர் பரிசோதனையில் அவர் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
சம்பவத்தின்போது அவர் பணியில் இல்லை எனவும் சாதாரண பயணியாகவே விமானத்தில் பயணம் செய்தார் என்றும் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் விளக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட விமானியின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தொழில்முறை விதிகளுக்கு எதிரானது என்றும் மலேசிய விமானப்போக்குவரத்துக் குழுமம் கண்டித்துள்ளது.


