ஜோகூர் பாருவின் தூய்மைக்குக் கைகொடுத்த கடும் நடவடிக்கைகள்

ஜோகூர் பாருவின் தூய்மைக்குக் கைகொடுத்த கடும் நடவடிக்கைகள்

2 mins read
1356cf65-7eac-47c1-b212-7939321dc5dd
ஜோகூர் பாருவில் சமூகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரி. - படம்: தி ஸ்டார்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: குப்பைப் போடும் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனைகள் பலனளிக்கத் தொடங்கி உள்ளன.

கடுமையான அமலாக்க நடவடிக்கையும் கட்டாய சமூகச் சேவைத் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஜோகூர் பாரு நகரில் குப்பைப் போடும் சம்பவங்கள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, நகரில் முக்கியமான பகுதிகளில் மீண்டும் மீண்டும் குப்பைப் போடும் குற்றங்கள் குறைந்துள்ளன.

அதிகாரிகள் இடைவிடாமல் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகப் பொதுமக்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலத் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் துப்புரவுக் கழகத்தின் (SWCorp) இயக்குநர் ஜைனல் ஃபித்ரி அகம்மது தெரிவித்துள்ளார்.

ஸ்டார்மெட்ரோ ஊடகத்திடம் பேசிய அவர், “அமலாக்க நடவடிக்கைகளும் சமூக சேவை உத்தரவுகளும் இணைந்து மேற்கொள்ளப்படுவது நல்ல பலனைத் தந்துள்ளது. கண்ட இடங்களில் குப்பைகளைப் போடும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அந்த நடவடிக்கைகள் கைகொடுத்துள்ளதையே இது காட்டுகிறது,” என்றார் அவர்.

“தவறிழைப்போர் தண்டிக்கப்படுவதோடு, நேரடித் துப்புரவுப் பணி ஈடுபாட்டின் மூலம் பயிற்றுவிக்கப்படுவதும் நடைபெறுகிறது.

“மலேசியாவை ஒரு தூய்மையான மற்றும் வளர்ந்த நாடாக முன்னிறுத்தும் நாட்டின் குறிக்கோள்களுக்கு இணங்கவே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

“குறிப்பாக, ‘ஜோகூர் சுற்றுப்பயண வருகை 2026’ போன்ற சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளுக்கு இது மிகவும் முக்கியம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சமூக சேவைத் தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம், அரசாங்கத் துப்புரவுப் பணியாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களை அவர்கள் நேரடியாக உணர்ந்துகொள்ள முடிகிறது என்றும் திரு ஜைனல் ஃபித்ரி குறிப்பிட்டார்.

நாட்டைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது அதிகாரிகள் அல்லது துப்புரவு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அக்கறை செலுத்தக்கூடிய கடமை அல்ல என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருதுப்புரவுநடவடிக்கை