ஜகார்த்தா: பேராசை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது முதல் தேசிய நிலை உரையின்போது இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சூளுரைத்துள்ளார்.
அதிபர் பிரபோவோ தமது நாட்டு மக்களிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடாளுமன்ற வளாகத்திலிருந்து உரையாற்றினார்.
இந்தோனீசியாவின் அதிபராக அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்றார்.
இதுவரை தமது அரசாங்கம் பதிவு செய்த சாதனைகளை அவர் தமது உரையின்போது பட்டியலிட்டார்.
ஏகபோகத் தனியுரிமையுடன் செயல்படும் நிறுவனங்கள், பொருள்களின் விலையைத் தங்களுக்குச் சாதகமாக நிர்ணயிப்பது, மானியம் வழங்கப்பட்ட பொருள்களைப் பதுக்கிவைத்து பிறகு லாபத்துக்கு அவற்றை விற்பது, வேண்டுமென்றே பற்றாக்குறைகளை உண்டாக்கி சந்தை விலையில் பாதிப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றை தமது அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்றார் திரு பிரபோவோ.
“இந்தோனீசிய மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது அவர்களை ஏமாற்ற தங்கள் சொத்துகளைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அதிபர் பிரபோவோ கூறினார்.
இவ்வாறு பேராசையுடன் செயல்படும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும் என்று அவர் சூளுரைத்தார்.
இந்தோனீசிய மக்களின் நலன் காக்க தாம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய முறையற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தோனீசியாவெங்கும் 80,000க்கும் மேற்பட்ட கிராமக் கூட்டுறவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிபர் பிரபோவோ கூறினார்.
மானியம் வழங்கப்பட்ட பொருள்கள் தரகர்களின் கட்டுப்பாட்டுக்குப் போகாமல் இருக்கவும் அவை விவசாயிகளுக்கு நேரடி பலன் அளிக்கக்கூடியதாக இருக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார்.
நாட்டின் ஒவ்வோர் அதிகார நிலையிலும் தலைவிரித்தாடும் ஊழல் களையப்படும் என்றும் அதிபர் பிரபோவோ உறுதி அளித்தார்.
ஊழல் அபாயம் கொண்ட செலவினங்களைக் குறைத்து, தமது அரசாங்கம் 300 டிரில்லியன் ரூப்பியா ($18 பில்லியன் அமெரிக்க டாலர்) மிச்சப்படுத்தியதை அவர் சுட்டினார்.
மிகப் பெரிய ஊழல் குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர தமது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று அதிபர் பிரபோவோ கூறினார்.