தேசிய ஒற்றுமைக்கு தேசியக் கொள்கைகளின் வலுவான புரிதல் அவசியம்: யூனேஸ்வரன்

தேசிய ஒற்றுமைக்கு தேசியக் கொள்கைகளின் வலுவான புரிதல் அவசியம்: யூனேஸ்வரன்

2 mins read
5186f946-db82-40c5-ae49-70c3af08206f
ருக்குன் நெகாராவின் ஐந்து கொள்கைகளும் நமது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன என்றார் தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் ஆர். யூனேஸ்வரன் (இடது). - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: தேசியக் கொள்கைகள் (ரூக்குன் நெகாரா), தேசிய ஒற்றுமையின் ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது என்றும் அதனை அனைத்து மலேசியர்களும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் ஆர். யூனேஸ்வரன் கூறினார்.

தேசிய சித்தாந்தம் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஒற்றுமையையும் தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்த, அதன் கொள்கைகளைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதிலும் நினைவூட்டுவதிலும் பெற்றோர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

“நமது பள்ளிப் பருவத்திலிருந்தே ‘ருக்குன் நெகாரா’ பற்றி நமக்குக் கற்பிக்கப்பட்டு, மனப்பாடம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாருக்காவது அது புரியவில்லை என்றால், அவர்கள் மலேசியாவின் உண்மையான உணர்வைப் போற்றத் தவறிவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

“ருக்குன் நெகாராவின் ஐந்து கொள்கைகளும் நமது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. அனைத்து அரசியல்வாதிகளும் ருக்குன் நெகாரா நிறுவப்பட்டதன் நோக்கத்தைக் கற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, போற்ற வேண்டும்,” என்றார் யூனேஸ்வரன்.

வியாழக்கிழமை (ஜூன் 4) விஸ்மா பெர்னாமாவில், மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவர் வோங் சுன் வாயை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜூன் 1ஆம் தேதியன்று, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியர்கள் ‘ருக்கூன் நெகாரா’வின் உணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதன் கொள்கைகளுக்குக் கட்டுப்பட விரும்பாதவர்கள் மலேசியக் குடிமக்கள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் வலியுறுத்திக் கூறிய கருத்துகளுக்கு யுனேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.

தேர்தல் காலத்திற்கு முன்னதாக, இனம், சமயம், அரச குடும்பம் (3ஆர்) தொடர்பான உணர்வுபூர்வமான பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் தூண்டக்கூடாது என்றும் மாமன்னர் நினைவூட்டினார்.

அரசியல் ஆதாயத்திற்காக 3ஆர் பிரச்சினைகளைச் சுரண்டுவதைத் தவிர்ப்பதன் மூலம் அரசியல் தலைவர்கள் ஒரு நேர்மறையான முன்மாதிரியை அமைக்க வேண்டும் என்று யுனேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

மலேசியர்கள் இப்போது அரசியல் ரீதியாக அதிக முதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறிய துணை அமைச்சர், தலைவர்களை அவர்களின் இன அல்லது சமயப் பேச்சுகளின் அடிப்படையில் அல்லாமல், அவர்களின் சேவை, செயல்திறன், சமூகங்களை ஒன்றிணைக்கும் திறனின் அடிப்படையில் மக்கள் மதிப்பிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நிறுவனம்செய்திமாமன்னர்