சைபர்ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் சைபர்ஜெயா நகரில் பல்கலைக்கழக தங்குவிடுதி ஒன்றில் 20 வயது மாணவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதி கேட்டும் மாணவர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு கேட்டும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
சந்தேக நபர்கள் மூவர் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை ஒன்பது மணிக்கும் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அதிகாலை இரண்டு மணிக்கும் இடையே கைது செய்யப்பட்டனர். 19லிருந்து 20 வயதுக்கு உட்பட்ட சந்தேக நபர்களில் இருவர் பெண்கள், ஒருவர் ஆண்.
மூவரையும் வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்கும் நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சராவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கைச் சேர்ந்த மனீஷாபிரீத் கோர் அக்கரா எனும் பெண், செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 10 மணியளவில் சிலாங்கூர் மாநிலத்தின் செப்பாங் மாவட்டத்தில் இருக்கும் தனது கொண்டோமினிய வீட்டில் உடலில் காயங்களுடன் மாண்டு கிடந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அப்பெண், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இயன் மருத்துவக் கல்வி பயின்று வந்தார்.
மனீஷாபிரீத், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துக்கு சுமார் 1.5 கிலோமீட்டர் அப்பால் உள்ள ‘முட்டியாரா வில்’ வீடுகள் ஒன்றில் வசித்து வந்தார். ஒருவருக்கு மேல் தங்கும் அந்த வீடுகளை சைபர்ஜெயா பல்கலைக்கழகம் மாணவர் தங்குவிடுதியாகப் பயன்படுத்தி வருவதாக ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் தெரிவித்தது.
மனீஷாபிரீத், ஐந்து மாணவர்களுடன் அவ்வீட்டில் தங்கி வந்தார். ஆனால், விடுமுறையையொட்டி இம்மாதம் 21ஆம் தேதி மற்ற ஐவர் சொந்த நாட்டுக்குச் சென்றிருந்தனர். தேர்வு ஒன்றை எழுதவேண்டியிருந்ததால் மனீஷாபிரீத் தனியாக வீட்டில் இருந்ததாக தி ஸ்டார் ஊடகம் குறிப்பிட்டது.
தலையில் தாக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக செப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் வியாழக்கிழமை தெரிவித்தார். கொலைக் குற்றங்களுக்கான குற்றவியல் சட்டப் பிரிவு 302ன்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தையடுத்து சைபர்ஜெயா பல்கலைக்கழகம் கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. தனியார் உயர் கல்விக் கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்திருப்பது அதற்குக் காரணம்.
சமூக ஊடகங்களில் பலர் #justiceformaniisha எனும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி குரல் எழுப்புகின்றனர். இளையர், விளையாட்டு அமைச்சர் ஹாயா இயோ மற்றும் வீடமைப்பு, உள்ளூர் அரசாங்க துணை அமைச்சர் அய்மன் அதிரா சாபு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
மலேசிய இந்தியர் காங்கிரசின் மாதர் பிரிவுத் தலைவரான என். சரஸ்வதி, மாணவர்கள் படித்துக்கொண்டே வசிக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்.