மாணவர் மனநலன் பாதிப்பு வழக்கு: யூடியூப் $3.9 பி. இழப்பீடு வழங்க உடன்பாடு

மாணவர் மனநலன் பாதிப்பு வழக்கு: யூடியூப் $3.9 பி. இழப்பீடு வழங்க உடன்பாடு

படம்: இபிஏ

21 Nov 2026 - 5:22 pm

2 mins read

நியூயார்க்: மாணவர்களின் மனநலனைப் பாதிக்கும் வகையில் அவர்களைக் காணொளிகளுக்கு அடிமையாக்கும் தளத்தை வடிவமைத்ததாகக் கூறி, அமெரிக்கா முழுவதும் உள்ள பள்ளி வட்டாரங்கள் யூடியூப்மீது வழக்குகள் தொடுத்துள்ளன.

அவ்வழக்குகளைச் சமரசமாக முடித்துக்கொள்ள, ஆயிரக்கணக்கான பள்ளி வட்டாரங்களுக்கு ஏறத்தாழ $3.9 பில்லியன் (3 பில்லியன் யுஎஸ்டி) இழப்பீடு வழங்க யூடியூப் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாகப் பதின்ம வயதினருக்கான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

பெரும்பாலான பள்ளி வட்டாரங்கள் சமரச உடன்பாட்டை ஏற்றுக்கொண்ட பிறகு, அடுத்த சில மாதங்களில் அது அதிகாரபூர்வமாக இறுதி செய்யப்படும்.

அதேவேளை, மாணவர்கள் பயன்படுத்தும் தேடல் கருவிகள் செயற்கை நுண்ணறிவு உரையாடல் அம்சங்களைத் தடுக்க மறுப்பதால் கூகல் நிறுவனம் பள்ளி ஊழியர்களின் எதிர்ப்பையும் சந்தித்துவருகிறது.

சமூக ஊடகங்களுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்புகளுக்கு இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் யூடியூப், மெட்டா, ஸ்னாப், டிக்டாக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக 10,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, மெட்டா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் $ 23.209 பில்லியன் (18 பில்லியன் யுஎஸ்டி) வரை இழப்பீடு வழங்கவும் பதின்ம வயதினரின் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தவும் உடன்பட்டது.

கென்டக்கி பள்ளி வட்டார வழக்கில் நான்கு நிறுவனங்களும் இணைந்து $34 மில்லியன் (27 மில்லியன் யுஎஸ்டி) வழங்கின.

அரிசோனாவின் டக்சன் பள்ளி வட்டார வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதம் ஓக்லண்ட் நீதிமன்றத்தில் மெட்டா, டிக்டாக், ஸ்னாப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு எதிராகத் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்