கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி ஒருவர், 14 வயது மாணவனால் அக்டோபர் 14ஆம் தேதி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து மலேசியக் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.
அண்மைய மாதங்களாகப் பள்ளிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, அவர்களின் மனநலனைப் பேண வழங்கப்படும் ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தை அவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அக்டோபர் 14ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டுக் கல்வித்துறைத் தலைமை இயக்குநர் அசாம் அகமது, இச்சம்பவம் அமைச்சு தனது நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் எச்சரிக்கை மணி எனக் கூறினார்.
மேலும், “அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்கத் தேவையான அனைத்தையும் செயல்படுத்த மலேசியக் காவல்துறையுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். பள்ளிகள் மாணவர்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிலாங்கூர் பள்ளி கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் எனப் பொதுமக்களை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அக்கொலை சம்பவத்திற்கு சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மாணவியைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் மாணவன், அம்மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததை முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.