பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், பெட்டாலிங் ஜெயாவில் இருக்கும் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி ஒருவர், சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) உயிரிழந்தார்.
காலை 9.10 மணியளவில் பள்ளி நேரத்தில், பண்டார் உத்தாமா 4 பள்ளியில் உள்ள மாணவிகளின் கழிப்பறைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக பெட்டாலிங் ஜெயா காவல்துறை உதவி ஆணையர் சம்சுதின் மமாட் தெரிவித்தார்.
சந்தேக நபரான 14 வயதுச் சிறுவன், அந்த மாணவியைத் தாக்கி கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. கத்திக்குத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு கூர்மையான ஆயுதங்களைக் காவல்துறையினர் பின்னர் கைப்பற்றினர்.
“தகவல் கிடைத்தவுடன் காலை 9.40 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், கொலை நடந்ததை உறுதி செய்தனர்,” என்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் திரு சம்சுதின் கூறினார்.
“16 வயது மாணவி, பள்ளிக் கழிப்பறையில் இறந்து கிடந்தார்,” என்றார் அவர்.
இந்தச் சம்பவத்தில் பகடிவதைக்கான எந்த அறிகுறியையும் காவல்துறை கண்டறியவில்லை என்று அவர் கூறினார். கொலைக்கான நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்ட ஆசிரியர்கள் தலையிட முயன்றனர். ஆனால், அவர்கள் அங்குச் சென்றபோது மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக திரு சம்சுதின் கூறினார்.
உயிரிழந்தவர், சந்தேக நபர் இருவரின் நண்பர்கள், வகுப்பு மாணவர்கள் உட்பட மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய காவல்துறையினர் பள்ளியில் இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் கொலை என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும் கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் திரு சம்சுதின் சொன்னார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து அம்சங்களும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.