பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் மாணவி ஒருவர் தனது உள்ளாடையில் மின்சிகரெட்டை ஒளித்து வைத்திருந்தார்.
திடீர் சோதனையில் அது தெரிய வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட மாணவி விநோதமாக நடந்துகொண்டதாக ஜேன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
“காரணத்தைக் கேட்டபோது தான் மின்சிகரெட் வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்,” என்றும் ஆசிரியர் குறிப்பிட்டார். பின்னர் பேனா போல் இருந்த மின்சிகரெட்டை அந்த மாணவி தனது உள்ளாடையிலிருந்து எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“மின்சிகரெட்டுகள், கடுஞ்சாய பேனாக்கள் (marker pens), குறிப்புச் சாயப் பேனாக்கள் (highlighters) ஆகியவற்றைப் போல் இருப்பதால் ஆசிரியர்கள் பார்க்காதபடி வகுப்புகளில் மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்த முடியும்,” என்றும் அந்த ஆசிரியர் சுட்டினார்.
இதுபோன்ற பல சம்பவங்களைத் தான் சந்தித்திருப்பதாக ஆய்ஷா எனும் மற்றோர் ஆசிரியர் தெரிவித்தார்.
மாணவர்கள் மின்சிகரெட்டுகளை ஒளித்து வைப்பதைத் தடுக்க கழிவறைகளில் இருக்கும் கூரைத் தகடுகளை (ceiling panels) அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் பள்ளிகளில் எடுக்கப்படுகின்றன; அப்படியிருந்தும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான பிறகுகூட சில மாணவர்கள் தொடர்ந்து மின்சிகரெட்டுகளைப் புகைப்பதாக ஆய்ஷியா விளக்கினார்.
மின்சிகரெட்டுகள் குறைந்த விலைக்குக் கிடைப்பதால் பள்ளிகளில் அவை பறிமுதல் செய்யப்பட்ட பிறகும் மாணவர்கள் அவற்றைத் தொடர்ந்து வாங்குவதாக மற்றோர் ஆசிரியர் கூறினார்.
பள்ளிகள் நடவடிக்கை எடுத்தாலும் பிள்ளைகளின் நடத்தையைக் கண்காணிக்கப் பெற்றோர் கூடுதல் முயற்சி செய்யவேண்டும் என்று ஆசிரியர் ஜேன் கருத்துரைத்தார்.

