தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் மாநாட்டுக்குத் தயாராகும் ஜகார்த்தா

1 mins read
4e20a2bc-75a0-4d0f-b48b-8942e4023791
2023ஆம் ஆண்டில் ஆசியானுக்குத் தலைமைத்தாங்கும் இந்தோனீசியா ஏற்றுநடத்தும் இரண்டாவது உயர்நிலைக் கூட்டம் செப்டம்பரில் நடக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பார்கள் என்றும், அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 7 வரை ஜகார்த்தா 43வது ஆசியான் மாநாட்டையும் அது தொடர்பான மற்ற மாநாடுகளையும் ஏற்று நடத்தவிருக்கிறது.

செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 7 வரை தென், மத்திய ஜகார்த்தாவில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொலைதூரக் கற்றலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜகார்த்தாவின் தற்காலிக ஆளுநர் ஹெரு புடி ஹார்டார்டோ கூறினார்.

மாநாட்டின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் திரு ஹெரு புடி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆசியான் மாநாடு ஜகார்த்தா மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. ஆசியான் தலைவர்களும் பேராளர்களும் சுமுகமாகச் செல்வதற்கு அந்தப் பகுதியில் உள்ள சில சாலைகளில் பொதுப் போக்குவரத்து திசை திருப்பிவிடப்படும் அல்லது மூடப்படும்.

மாநாடு நடைபெறும் காலத்தில் அந்நகரின் அரசாங்க ஊழியர்களில் 75 விழுக்காட்டினர் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்றும் திரு ஹெரு புடி அறிவித்தார்.

தற்போது ஜகார்த்தாவின் அரசாங்க ஊழியர்களில் பாதிப் பேர் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அந்நகரில் மோசமடைந்துவரும் தூய்மைக்கேட்டுப் பிரச்சனையைச் சமாளிக்க முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மருத்துவமனைகள் போன்ற பொதுச் சேவைகள் வழங்கும் குறிப்பிட்ட சில இடங்களில் பணிபுரிவோருக்காக அந்தக் கொள்கையில் விதிவிலக்குகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்