நொய்டா: வகுப்பறையில் ஆசிரியர் தங்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, குளிரூட்டி வழியாகப் படமெடுத்தபடி வந்த பாம்பைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்பட்டு வரும் அமிட்டி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நிகழ்ந்தது.
குளிரூட்டியின் காற்றுப்போக்கி வழியாக வந்த பெரிய பாம்பைக் கண்டதும் மாணவர்கள் சிலர் பீதியடைந்து, அங்கிருந்து ஓட முயன்றனர். வேறு சிலர் நாற்காலிமீது ஏறி நின்றனர்.
ஆயினும், மாணவர்களை அமைதிப்படுத்தி, குழப்பம் நேராமல் இருப்பதற்கு முயன்றார் அவ்வகுப்பறையில் இருந்த விரிவுரையாளர்.
நொய்டாவில் பாம்பால் தொந்தரவு ஏற்பட்டது இது முதன்முறையன்று. அண்மையில் நொய்டாவிற்கு அருகிலுள்ள சிற்றூர் ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்டது. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று காட்டில் விட்டனர்.

