கோலாலம்பூர்: பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன், கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகிய நகரங்கள், நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தேசக் கட்டணத்தை அறிமுகப்படுத்தும் முதல் நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமர் அலுவலக அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசம்) டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், மலேசிய பசுமை தொழில்நுட்பம், பருவநிலை மாற்ற நிறுவனம் ஆகியவற்றால் நெரிசல் கட்டணம் இன்னமும் பரிசீலனையில் இருக்கிறது என்று டாக்டர் ஸலிஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ வெளியிட்ட தகவல் குறிப்பிட்டது.
“அமலாக்க நடைமுறைகள், போக்குவரத்தைக் குறைக்கும் சாத்தியம், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வில் ஆராயப்படும். இந்த ஆய்வு, இவ்வாண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அமைச்சர்களின் கேள்விநேரத்தின்போது அவர் பதிலளித்தார்.
கோலாலம்பூரில் நெரிசல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசல் 20% வரை குறையும் என்பது ஆரம்பக்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
“கட்டணம் மிகவும் குறைவாக இருக்கக்கூடாது. அதே வேளையில் குறிப்பிட்ட சாலைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும் வகையில் அது இருக்கவேண்டும். பயனீட்டாளர்களுக்கும் சுமையாக இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
நியூயார்க்கின் வாகனப்பதிவு எண் வாசிப்பு முறை, சிங்கப்பூரின் மின்னியல் சாலைக் கட்டணம், லண்டனின் நெரிசல் கட்டணங்களுக்கான வட்டாரங்கள் போன்ற மற்ற நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முறைகளை மலேசிய அரசாங்கம் பரிசீலீத்து வருகிறது.
நியூயார்க்கில், வாகனப் பதிவு எண் அடையாளம் காணப்பட்டதும் தானாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வட்டார, நேர அடிப்படையில் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. லண்டனில் உச்ச நேரத்தில் குறிப்பிட்ட நெரிசல்மிக்கப் பகுதியில் நுழையக் கட்டணம் செலுத்த வேண்டும். கோலாலம்பூர் நகருக்குள் நாள்தோறும் 1.5 மில்லியன் வாகனங்கள் நுழைகின்றன, வெளியேறுகின்றன. ஆனால் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் 25 விழுக்காடு என்ற நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

