டீசல் வாகனங்களுக்குச் சாலை வரியைக் குறைக்க ஆய்வு: மலேசியப் போக்குவரத்து அமைச்சு

டீசல் வாகனங்களுக்குச் சாலை வரியைக் குறைக்க ஆய்வு: மலேசியப் போக்குவரத்து அமைச்சு

2 mins read
676fa04a-0935-426e-8118-7b77792ef338
மலேசியாவில் டீசல் வாகனங்களுக்கான சாலை வரிகளைக் குறைக்கும் ஆய்வு விரைவில் தொடங்கவிருக்கிறது. - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

பத்து காவான்: மலேசியாவில் உள்ள டீசல் வாகனங்களுக்கான சாலை வரிகளை எவ்வாறு குறைக்கலாம் என்பது விரைவில் ஆராயப்படவிருக்கிறது.

அதுகுறித்த அதிகாரபூர்வ பரிந்துரையை மலேசியப் போக்குவரத்து அமைச்சு தேசியப் பொருளியல் நடவடிக்கை மன்றத்திடம் முன்வைத்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உத்தரவுப்படி டீசல் வாகன உரிமையாளர்கள்மீதான சுமையைக் குறைக்க மலேசிய அரசாங்கம் விரிவான முயற்சிகளை மேற்கொள்கிறது.

மலேசியாவில் டீசல் வாகனங்களுக்கு மானியத் திட்டங்கள் வழங்கப்படவில்லை.

“எந்தவித உதவியையும் மானியத்தையும் பெறாத டீசல் வாகன உரிமையாளர்களுக்குச் சாலை வரிகளைக் குறைப்பதன் மூலம் உதவ முடியுமா என்பதை ஆராய்கிறோம்,” என்று திரு லோக் குறிப்பிட்டார்.

அரசாங்கம், ‘பூடி’ (BUDI) டீசல் போன்ற மானியத் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் 400 ரிங்கிட் தொகை வழங்குகிறது என்பதைச் சுட்டிய திரு லோக், பேருந்துகள், லாரிகள் போன்றவற்றுக்கும் ‘ஃபிலீட்’ (fleet) அட்டைக் கட்டமைப்பு நடப்பில் உள்ளதாகச் சொன்னார்.

தற்போது ஆராயப்படும் சாலை வரிக் கழிவுகள் குறிப்பிட்ட அந்தத் திட்டங்களுக்குத் தகுதிபெறாதோருக்கு உதவியாக இருக்கும் என்றார் திரு லோக்.

எந்த அளவு சாலை வரிகளைக் குறைக்கவேண்டும், அவ்வாறு செய்தால் அரசாங்கத்தின் வருமானம் பாதிக்குமா போன்றவையும் ஆராயப்படும் என்று திரு லோக் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் அதுதொடர்பில் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

சாலைப் போக்குவரத்துத் துறையின் 80வது நிறைவு விழாவில் திரு லோக் பேசினார்.

முன்னதாக, அதே நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், டீசல் வாகனங்களுக்கான சாலை வரிகளை எவ்வாறு குறைக்கலாம் என்பதை ஆராயும்படி போக்குவரத்து அமைச்சிடம் கூறியிருந்தார்.

டீசல் விலை அதிகரிப்பால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாடீசல்போக்குவரத்து அமைச்சு