தோக்கியோ: ஜப்பானில் 15 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 350,000 பேர் கொக்கைன் போதைப்பொருளைப் பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
போதைப்பொருள் புழங்கிகளைக் கண்டறிவதற்கான தற்போதை ஆராய்ச்சி முறை 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஆக அதிகமான மதிப்பீடு இது என்று அரசாங்கம் வியாழக்கிழமை (ஜூலை 2) வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவித்தது.
ஜப்பானின் சுகாதார, மனிதவள மற்றும் நல்வாழ்வு அமைச்சு 2025ஆம் ஆண்டு நடத்திய நாடளாவிய ஆய்வில் பங்கேற்றவர்களில் 0.4 விழுக்காட்டினர் கொக்கைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறினர்.
கடந்த ஆண்டு கொக்கைன் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் சாதனை அளவாக அதிகரித்ததைத் தொடர்ந்து அவற்றை முறியடிக்கக் காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது.
சட்டவிரோத போதைப்பொருள்களில் கஞ்சாவையே அதிகமானோர் பயன்படுத்தியதாக ஆய்வு கண்டறிந்தது. அதாவது, 1.16 விழுக்காட்டு மக்கள் கஞ்சா பயன்படுத்தியதாகத் தெரியவந்தது. மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிட்டால் அந்த விகிதம் 1.41 மில்லியன் பேரைக் குறிக்கிறது.
இதற்கிடையே, போதைப்பொருள் பயன்பாட்டின் போக்கு பற்றி ஜப்பானின் தேசிய நரம்பியல் மற்றும் உளவியல் மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் தக்குயா ஷிமானே கவலை தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்பெல்லாம் ஊக்கமருந்துகளே பயன்பாட்டில் இருந்தன. ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப்போல கஞ்சாவையும் கொக்கைனையும் பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது,” என்றார் அவர்.

