பெட்டாலிங் ஜெயா: மோசடிக்காரர்கள் வழக்கமாக வயதானவர்களையும் முதியோர்களையும் குறி வைத்துப் பணம் பறிப்பது வழக்கம்.
ஆனால், மலேசியாவில் உள்ள சூழல் வேறுமாதிரியாக உள்ளது.
அங்கு ஏழு வயதுச் சிறுவர்கள் முதல் வயதுகுறைந்த பிள்ளைகளையும் மோசடிக்காரர்கள் குறி வைப்பதாக காசா (GASA) எனப்படும் மோசடிக்கு எதிரான உலகக் கூட்டணி தெரிவித்து உள்ளது.
மலேசியாவில் நிகழ்த்தப்படும் மோசடிச் சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதற்காக மலேசியப் பெற்றோர்களிடம் அது ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் பங்கேற்ற ஐந்த பெற்றோர்களில் ஒருவர், குறைந்தபட்சம் தங்களது ஒரு குழந்தையாவது மோசடிக்காரர்களின் இலக்குக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.
“இது நாட்டின் இளம் மின்னிலக்கப் பயனாளர்களை மோசடிக்காரர்கள் குறி வைக்கும் புதிய நிலவரத்தை உணர்த்துகிறது.
“அதனால், ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்துத் தப்பிக்க குடும்பங்கள் போராடி வருகின்றன,” என்று ஆய்வறிக்கையில் காசா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜோரிஜ் ஆப்ரஹாம் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், மோசடிக்காரர்கள் எந்தெந்த வழிகளில் மலேசியக் குழந்தைகளைக் குறி வைக்கிறார்கள் என்ற விவரம் அந்த அறிக்கையில் இல்லை.
அந்த அமைப்பு மோசடிக்கு எதிரான நிலவரத்தை ஆய்வு செய்த 42 சந்தைகளில் ஒன்று மலேசியா. உலக அளவில் மோசடிக்கு எதிராகச் செயல்படும் ஸ்கேம்அட்வைசர் (ScamAdviser), ஹுஸ்கால் (Whoscall) ஆகிய சேவை நிறுவனங்களின் ஆதரவுடன் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மலேசியாவில் உள்ள 18 மற்றும் அதற்கு மேற்பட்ட 1,000 பேர் அந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களில் 63 விழுக்காட்டினர் பெற்றோர்கள்.
கடந்த பல ஆண்டுகளாக, ஓய்வுபெற்றவர்களிடம் பணம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் அவர்களே மோசடிக்காரர்களின் முதல் இலக்காக இருந்து வந்துள்ளதாக மலேசியாவின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவிக்கிறது.

