புத்ராஜெயா: மலேசியாவில் வளங்கள் வீணடிக்கப்படுவதையும் முறைகேடுகளையும் தடுப்பதற்கு மானியங்களைச் சீரமைப்பது எளிதல்ல என்றபோதிலும் அது மிகவும் அவசியமான நடவடிக்கை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளியல் சார்ந்த கடினமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சருமான அன்வார், முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகம்மது, நஜீப் ரசாக் ஆகியோரும்கூட இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றனர் என்றும் ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான மன உறுதி அவர்களிடம் போதிய அளவில் இருக்கவில்லை என்றும் கூறினார்.
மிகச் சில நாடுகள் மட்டுமே மானியச் சீரமைப்பைச் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளன. அதை முயற்சி செய்து பார்க்கக்கூடப் பல நாடுகள் துணிவதில்லை. பொருளியல் கோட்பாடுகள் இதற்கு ஆதரவாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், தேசிய வாக்குறுதிக்குக் கட்டுப்பட்ட தலைவர்கள் என்ற முறையில், மக்களுக்குச் சிறந்ததைச் செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது,” என்று பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமது தலைமையிலான அரசாங்கம் ‘சும்பங்கான் துனாய் ரஹ்மா’, ‘சும்பங்கான் அசாஸ் ரஹ்மா’ ஆகிய திட்டங்களின்கீழ் வழங்கப்படும் ரொக்க உதவிக்கான ஒதுக்கீட்டை 15 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது என்றும் முந்தைய ஆட்சியில் இது 8 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ரொக்க உதவி ஒதுக்கீடு மேலும் அதிகரித்து, 18 பில்லியன் ரிங்கிட் வரை உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் கூறினார். அரசாங்க ஊழியர்கள் தற்போது அதிக ஊதியத்தையும் சிறப்பான வாழ்க்கைச் சூழலையும் அனுபவித்து வரும் வேளையில், நிதி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் சேர்ந்த ஊழியர்கள் தங்களது திறனை மேம்படுத்தி, நிர்வாகத் தாமதங்களைக் குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
வரலாற்றில் எந்தவொரு மாபெரும் பேரரசும் மக்களுக்கு உதவியதால் வீழ்ச்சியடைந்ததில்லை என்றும் மாறாகப் பேராசை, மலிந்துவிட்ட ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலேயே வீழ்ச்சியடைந்தன என்றும் பிரதமர் அன்வார் தமது உரையில் வலியுறுத்தினார்.
