கோலாலம்பூர்: விவசாயிகள், உணவு உற்பத்தியாளர்களுக்கு மலேசிய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கும் என்று வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) தெரிவித்துள்ளார்.
2026 மலேசிய வேளாண்மை, தோட்டக்கலை, விவசாயச் சுற்றுலா கண்காட்சியில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிகழ்வுக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நெல் உற்பத்தி, மீன்பிடித் துறைகளின் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து தேவைப்படுகிறது என்றார்.
“மானியத் திட்டங்கள் தொடரும், ஆனால் அவற்றை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும்,” என்ற அவர், சந்தை நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து கோழி, முட்டைக்கான மானியங்கள் விலக்கப்பட்டதை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க உதவி இன்றி உற்பத்தியாளர்களால் தற்சார்புடன் இயங்க முடியும் என்ற நிலை வரும்போது, மானியங்கள் திரும்பப் பெறப்படும். மீனவர்களின் வாழ்வாதாரம், உற்பத்தியை உறுதிசெய்யும்வரை அவர்களுக்கான மானியம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, எரிபொருள் மானியத் திட்டம் மூலம் உலகளாவிய பணவீக்கத்தின் தீவிர தாக்கத்திலிருந்து மலேசிய மக்களைப் பாதுகாக்க முடிந்ததாகப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் சூழலில், அதன் பலன் இறக்குமதியாகும் உணவுப் பொருள்கள் , விநியோகக் கட்டணங்களில் எதிரொலிக்கிறதா என்பதை உள்நாட்டு வணிக அமைச்சு கண்காணிக்கும் என்றும், வணிகர்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மேலும், 2050க்குள் பூஜ்ஜிய கரிம உமிழ்வு இலக்கை அடையவும், நாட்டின் பொருளியல் வலிமையை உயர்த்தவும் ஆற்றல் மாற்றம் குறித்த திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


