கைக்குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: அன்வார் பெருமிதம்

1 mins read
87dc0de3-2117-47ea-a40b-e9bc897e608a
தாயாரின் கையில் நான்கு மாதக் குழந்தை (நடுவில்).  - படம்: மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையக் குழு

கோலாலம்பூர்: நான்கு மாத ஆண் குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையக் குழுவினருக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் நடந்த அந்த அறுவை சிகிச்சை, மலேசியாவின் சுகாதாரப் பணியாளர்களின் நிபுணத்துவத்தை, குறிப்பாக சிக்கலான, அபாயகரமான மருத்துவச் சிகிச்சைகளைச் செய்துமுடிக்கும் திறமையைக் காட்டுவதாகத் திரு அன்வார் கூறினார். 

மருத்துவர்களின் அர்ப்பணிப்பும் இதன்மூலம் வெளிப்பட்டதாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த, 6.2 கிலோ எடை கொண்ட அந்தக் கைக்குழந்தைக்கு அதன் தாயாரிடமிருந்து கல்லீரல் பெறப்பட்டு, பொருத்தப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்தார்.

சிகிச்சை முறை அபாயகரமாகவும் சிக்கலாகவும் இருந்ததையும் குழந்தையின் ரத்த நாளங்கள் நுண்ணியவை என்பதையும் டாக்டர் ஸுல்கிஃப்லி சுட்டினார்.

மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு மாற்றப்பட்டதற்கு முன்பாக அந்தக் கைக்குழந்தை மூவார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.

வியட்னாமைச் சேர்ந்த அந்தக் குழந்தையின் தாயாருக்கு 38 வயது. 

அறுவை சிகிச்சை நாளன்று பிள்ளைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தை மயக்கமுற்றது. ஒரு மணி நேரத்திற்கு மேல் மருத்துவர்கள் மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு குழந்தைக்கு நினைவு திரும்பியது.

குறிப்புச் சொற்கள்