கோலாலம்பூர்: வரும் கூட்டத்தொடரிலிருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் அனைத்து புதன்கிழமைகளும் சர்க்கரையில்லாத நாளாக இருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திக்குப் பிறகு அவர்களுடன் உரையாடும்போது திரு ஜோஹாரி அப்துல் இவ்வாறு தெரிவித்ததாக ‘தி ஸ்டார்’ நாளிதழ் தெரிவித்தது.
வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் ஒவ்வொரு புதன்கிழமைகளும் சர்க்கரை இல்லாத நாளாக இருக்கும் எனவும் ஊடகங்கள் உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் சர்க்கரையற்ற உணவு பொருள்களே வழங்கப்படும் எனவும் அவர் கூறியதாக அந்நாளிதழ் சொன்னது.
“அக்டோபர் 14ஆம் தேதித் தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி முடியும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேநீர் போன்ற பானங்களில் கூட சர்க்கரை சேர்க்கப்படாது. சர்க்கரையற்ற உணவுகள் வழங்குவதை நாடாளுமன்றம் உறுதி செய்யும்,” என மலேசிய நாடாளுமன்றச் சபாநாயகர் கூறினார்.
மேலும், “நாம் ஆரோக்கியமான சமுதாயமாக மாறுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

