பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் முன்னணி இஸ்லாமியக் கட்சி ஒன்றின் அரசியல் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 44 பேர் மாண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்கக் கூட்டணிப் பங்காளியான ‘ஜாமியாட் உலீமா இ இஸ்லாம் எஃப்’ (ஜெயுஐஎஃப்) கட்சியை இலக்காகக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ‘கார்’ நகரில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.
கூடாரத்தின் ஒரு பக்கம் சரிந்ததால் தப்பிக்க முயன்றவர்கள் சிக்கியதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய திரு அப்துல்லாஹ் கான் கூறினார்.
அங்கு இருந்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மிக மோசமாக இருந்தன என்று கட்சி ஆதரவாளர் சபீஹ் உல்லாஹ், 24, குறிப்பிட்டார்.
தாக்குதலில் 44 பேர் உயிரிழந்ததையும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையும் கைபர் பக்துன்குவா மாநிலத்துக்கான சுகாதார அமைச்சர் ரியாஸ் அன்வார் உறுதிப்படுத்தினார்.
அது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் தற்கொலையாளி மேடைக்கு மிக அருகில் தன்னைத் தானே வெடித்துக்கொண்டார் என்றும் அவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
வெடிப்பு நேர்ந்த நேரத்தில் கூடாரத்தில் ஏறக்குறைய 400 பேர் இருந்ததாகக் கூறிய பாகிஸ்தானிய ஊடகங்கள், சம்பவ இடத்தில் பல அவரசநிலை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
சடலங்கள் ஆங்காங்கே இருந்ததையும், தொண்டூழியர்கள் ரத்தத்துடன் காணப்பட்டவர்களை அவசர மருத்துவ வாகனங்களுக்குக் கொண்டுசென்றதையும் சமூக ஊடகத்தில் வலம்வரும் படங்கள் காட்டின.
பாகிஸ்தானில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் அடுத்த சில வாரங்களில் கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்குச் சமூக ஊடகம் வழியாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
இதுவரை எந்தக் குழுவும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.