லாகூர்: பாகிஸ்தானின் குவெட்டா நகரத்தில் இருக்கும் ராணுவ தலைமையக வளாகத்திற்கு வெளியே தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) நடந்த இந்தத் தாக்குதலில் 10 பேர் மாண்டனர். 33 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய சிலர் ராணுவ வளாகத்திற்குள் நுழைந்தனர். அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
ராணுவ வளாகத்திற்குள் நுழைந்த நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பலுசிஸ்தான் மாநில முதல்வர் சர்ஃபிராஸ் புக்டி தெரிவித்தார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் கனரக வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்து வளாகத்திற்கு வெளியே வெடிப்பை ஏற்படுத்தினார் என்று புக்டி கூறினார்.
தாக்குதலில் ராணுவ வீரர்களுடன் பொதுமக்களும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எத்தனை ராணுவ வீரர்கள் மாண்டனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகர்தான் குவெட்டா. ஈரான், ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பலுசிஸ்தானில் பிரிவினைவாதிகளும் போராளிகளும் உள்ளனர். அவர்கள் அந்த மாநிலத்தில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.