டத்தோ, டான்ஸ்ரீ போன்ற பட்டங்கள் பணத்தால் வாங்கப்படுவது அல்ல: மாமன்னர்

2 mins read
3dbde1c5-49e3-4942-ac10-773ba10dcaf6
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மத்திய அரசாங்கத்தின் விருதுகள், பட்டங்கள் விற்பனைக்கோ அல்லது பிரசாரத்துக்காகவோ அல்ல என்றும் மாறாக உண்மையிலேயே அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்த தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் பரிசீலனைக்கான நிபந்தனைகளைக் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், ஒவ்வொரு முன்மொழியப்பட்ட வேட்பாளரையும் மறு மதிப்பீடு செய்வேன் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

“என் பார்வையில், நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு சேவை செய்தவர்கள் அல்லது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள் மட்டுமே சிறப்புப் பட்டத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், ஒவ்வோர் ஆண்டும் பலர் பட்டத்துக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை. அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் கட்சிகள் இருந்தாலும், நான் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

“டத்தோ மற்றும் டான்ஸ்ரீ பட்டங்கள் விற்பனைக்கு இல்லை. உங்களிடம் நிறைய பணம் இருந்தால், அவற்றைக் கொண்டு தொண்டு செய்யுங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள்,” என்று மாமன்னர் கூறினார்.

“அதன் அடிப்படையில் இன்று வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களை மதிக்க வேண்டும், பெருமைப்பட வேண்டும்,” என்று மாமன்னர் மேலும் கூறினார்.

திங்கட்கிழமை (ஜூன் 2) தேசிய அரண்மனையில் மாமன்னரின் அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு விழாவில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையில், நாட்டின் தலைவராக தமது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் தாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்கள் அளிக்கும் ஆதரவுக்கு மாமன்னர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்