சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக் கட்டுமானம் 2027ஆம் ஆண்டு நிறைவுபெறும்

சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக் கட்டுமானம் 2027ஆம் ஆண்டு நிறைவுபெறும்

2 mins read
da1f97c1-d54a-4cd2-92a8-702dacd47ecf
பினாங்கு, சுங்கை பாக்காப்பில் உள்ள தமிழ்ப் பள்ளி. - படம்: மோகன் சுப்பிரமணியம்

கோலாலம்பூர்: 2015ஆம் ஆண்டு முதல் தாமதமாகி வந்த பினாங்கு, சுங்கை பாக்காப்பில் உள்ள தேசிய வகை தமிழ்ப் பள்ளியின் கட்டுமானத் திட்டம், 2027ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் அன்வார் இப்ராகிம், 12,667,367.59 ரிங்கிட் என்ற உச்சவரம்பு செலவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ‘யாயாசான் டிடிக் நெகாரா’ செயல்படுத்தும் அமைப்பாக நியமிக்கப்பட்டு, இத்திட்டம் தொடரப்பட்டதாகக் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

மத்திய நில ஆணையரின் வசமுள்ள இடத்தில், ஆறு வகுப்பறைகள், ஒரு பொது அலுவலகம், சிறப்பு அறைகள், பிற வசதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடத்தின் முழுமையான மாற்றுத் தொகுதியைக் கட்டுவதும் இத்திட்டத்தில் அடங்கும் என்றார் அவர்.

சுங்கை பாக்காப் தேசிய வகை தமிழ்ப் பள்ளி கட்டுமானத்தின் தற்போதைய நிலை, தாமதத்திற்கான காரணம், சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செனட்டர் டாக்டர் ஏ. லிங்கேஸ்வரன் மாநிலச் சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு 2026 ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்பு கடிதம், 2026 ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறினார்.

2015ஆம் ஆண்டு முதல் திட்டத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஃபத்லினா, செயலாக்கம் தொடர்பான பல சிக்கல்கள், நிதி நெருக்கடிகள் மற்றும் சட்டரீதியான தகராறுகள் காரணமாகவே இது நிகழ்ந்ததாக விளக்கினார்.

2015ல் பள்ளி நிர்வாகக் குழு மத்திய அரசிடமிருந்து 3.5 மில்லியன் ரிங்கிட் ஒருமுறை சிறப்பு ஒதுக்கீடாகப் பெற்றிருந்தபோதிலும், குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டம் முடிக்கப்படவில்லை என்றார் அவர்.

இதற்கிடையில், குறிப்பாக தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில், குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பள்ளிகளின் இடங்களை மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சு தயாராக இருப்பதாக அமைச்சர் ஃபத்லினா கூறினார்.

“அனைத்து வகையான பள்ளிகளுக்கும் கல்வி முன்னுரிமைகள் நியாயமாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள அளவுகோல்களை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சு எப்போதும் தயாராக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
பள்ளிஅமைச்சர்கல்வி