வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கிய ‘ஸ்டாா்லைனா்’ விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 5ஆம் தேதி அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குச் சென்று சேர்ந்தனர்.
ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அங்கேயே தங்கியிருக்கும் நிலைமை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19ஆம் தேதி தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இது விண்வெளியில் அவர் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் ஆகும்.
முன்னதாக கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடினார்.

