ஜோகூர்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை எதிர்பார்க்கப்படும் ‘சூப்பர் எல் நினோ’ பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், ஜோகூர் மாநில அரசு நீர் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
மலேசியாவின் ஜோகூர், மலாக்கா மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு 20 முதல் 40 விழுக்காடுவரை குறையக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை நீர் இருப்பை ஆய்வு செய்யவும் விநியோகத்தின் திறனை உறுதிப்படுத்தவும் ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) மாச்சாப் அணையைப் பார்வையிட்டதாக ‘ரான்ஹில் எஸ்ஏஜே’ நீர் நிறுவனம் தெரிவித்தது.
நாளொன்றுக்கு 64 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட சிம்பாங் ரெங்காம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இந்த அணையே முக்கிய நீர் ஆதாரமாகும். இந்நிலையம் சிம்பாங் ரெங்காம், மாச்சாப், பொந்தியான் வடக்கு, பத்து பாஹாட்டினுடைய தெற்குப் பகுதிகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குகிறது.
பாதிக்கப்படக்கூடியப் பகுதிகளில் சீரான நீர் விநியோகத்தை உறுதிசெய்ய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர் வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க நீர் பிடிப்புப் பகுதிகளில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது.
அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தாம் கடமைப்பட்டுள்ளதாகக் கூறிய ரான்ஹில் எஸ்ஏஜே நிறுவனம், வறட்சிக் காலத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
