தைப்பே: சக்திவாய்ந்த ‘கிராதோன்’ புயல் மணிக்கு 185 கிலோமீட்டரிலிருந்து 230 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் தைவானை நோக்கி விரைவதாக பிலிப்பீன்சின் வானிலை மையம் அக்டோபர் 1ஆம் தேதியன்று தெரிவித்தது.
இந்தப் புயல் காரணமாகப் பிலிப்பீன்சின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்தது.
தற்போது தைவானின் தெற்குப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்து வருகிறது.
‘கிராதோன்’ புயல் தைவானின் தென்மேற்குக் கடலோரப் பகுதியில் அக்டோபர் 2ஆம் தேதியன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள ஆறு நகரங்களில் பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
முக்கிய துறைமுக நகரமான கௌஷியுங்கும் இதில் அடங்கும்.
தலைநகர் தைப்பேயில் உள்ள அலுவலகங்கள் வழக்கமாகச் செயல்பட்டு வருவதாகத் தைவானிய அதிகாரிகள் கூறினர்.

