பாலஸ்தீனத்துக்கே ஆதரவு: இந்தோனீசியா உறுதி

2 mins read
abc66254-0217-4242-9d7a-fdebcc23106a
இஸ்ரேல் நகரில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் இந்தோனீசிய அதிபரின் படம் காணப்பட்டது. - படம்: சமூக ஊடகம்

ஜகார்த்தா: பாலஸ்தீனம் ஓர் அரசாங்கமாக அங்கீகரிக்கப்படுவதைத் தான் ஆதரிப்பதாக இந்தோனீசியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

காஸா அமைதித் திட்ட விளம்பரத்தில் அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் படம் வெளியான பின்னர் ஏற்பட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு அந்த மறு உறுதியைத் தெரிவித்துள்ளது.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டம் இஸ்ரேலில் விளம்பரப்படுத்தப்பட்டது.

அந்த விளம்பரத்தில் திரு டிரம்ப், திரு பிரபோவோ, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பாலஸ்தீன அதிகாரத்துவ அதிபர் முஹ்முத் அப்பாஸ் ஆகியோரின் படங்களுடன் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சில தலைவர்களின் படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

“அமெரிக்க அதிபரின் திட்டத்துக்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும்; அதிபரே உங்களுடன் நிற்கிறோம். உடன்பாட்டை ஏற்படுத்துங்கள்; செய்து முடியுங்கள்,” என்னும் வாசகங்கள் அந்த விளம்பரத்தில் காணப்பட்டன.

அதிபர் பிரபோவோவின் படம் அந்த விளம்பரத்தில் காணப்பட்டதால், வேறுமாதிரி பொருளாகிவிடக்கூடாது என்பதைக் கருதி, இந்தோனீசிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் யுவோனா மெவெங்காங் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“இஸ்ரேலுடன் எந்தவோர் உறவும் வைத்துக்கொள்வதில்லை என்பதில் இந்தோனீசியா தெளிவாக உள்ளது. பாலஸ்தீனத்தை ஓர் அரசுரிமை பெற்ற, சுதந்திர நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்காத வரை இதே முடிவு தொடரும்,” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வட்டார அமைதிக்கான ஆப்ரகாம் கவசக்கூட்டணி என்னும் அமைப்பு அந்த விளம்பரத்தைக் காட்சிப்படுத்தி உள்ளது. அது பின்னர் ‘எக்ஸ்’ தளத்தில் பகிரப்பட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு, கொள்கை, பொருளியல் நிபுணர்கள் ஆகியோரின் முயற்சியில் உருவானது அந்த அமைப்பு.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த திரு டிரம்ப் தெரிவித்திருக்கும் யோசனையை இஸ்ரேல் அரசாங்கம் ஏற்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின்போது பாலஸ்தீனத்துக்கான ஆதரவை அதிபர் பிரபோவோ ஏற்கெனவே வெளிப்படுத்தி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்