டொரொன்டோ: உக்ரேனுக்குத் தமது நாடு ஆதரவளிக்கும் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
திரு கார்னி, தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை நேரடியாகச் சந்தித்தார். அப்போது உக்ரேனுக்குத் தங்கள் ஆதரவு இருக்கும் என்பதை திரு கார்னி வலியுறுத்தினார்.
“உக்ரேனின் முழு ஆதரவும் பங்களிப்பும் இல்லாமல் அமைதி சாத்தியமில்லை என்பதை நாங்கள் எடுத்துரைக்கிறோம். எங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதைத் தெரிவிக்கிறோம்,” என்று திரு கார்னி, திரு ஸெலென்ஸ்கியிடம் கூறினார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த தலைவரான போப் லியோ அப்பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்கும் சடங்கில் இரு தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (மே 18) வத்திகனில் நடைபெற்ற அந்நிகழ்வில் அவர்கள் சந்தித்துப் பேசினர்.
உக்ரேனிய, ரஷ்ய அதிபர்கள் இருவருடனும் தாம் திங்கட்கிழமை (மே 19) பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 சந்திப்பை முன்னிட்டு திரு கார்னி, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெ லெய்ன் உள்ளிட்டோரையும் சந்தித்தார்.