வாஷிங்டன்: சிங்கப்பூரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அதிபர் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வர்த்தக வரிகள் சட்டபூர்வமானதா என்பது புதன்கிழமை (நவம்பர் 5) அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அமெரிக்காவின் அனைத்துலக அவசரப் பொருளாதாரச் சட்டம் (IEEPA) அதிபருக்கு அத்தகைய அதிகாரத்தை வழங்குகிறதா என்பதன் அடிப்படையும் முழுமையும் இருதரப்பு வாதங்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. அனைத்துவித வரிகளும் அமெரிக்க காங்கிரஸ் அனுமதியுடன் மட்டுமே விதிக்கப்படவேண்டும் என்பதும் விசாரணையின் அங்கமாகும்.
அடுத்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், வரிகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டால் அமெரிக்க வர்த்தகத்தை அது பெரிதும் பாதித்துவிடும். இதுவரை வசூலித்த வர்த்தக வரிகள் குறைக்கப்பட்டு, 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அந்த நாடு பிற நாடுகளுக்குத் திரும்பித்தர வேண்டியிருக்கும்.
ஸ்பெயின், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, கனடா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின் பெயர்கள் மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில் குறிப்பிடப்பட்டன. விசாரணையில் சிங்கப்பூரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வோரில் நஷ்டம் ஏற்படாமல், உபரியைக் கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரிகளை எதிர்க்கும் சிறு நிறுவனங்களைப் பிரதிநிதித்து வாதாடும் வழக்கறிஞர் திரு நீல் கட்யால், வரிகளின் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என்றார். “உண்மையான அவசர நிலையை வரிகள் எதிர்கொள்ளவில்லை. உபரிகள் வழங்கும் சுவிட்சர்லாந்து போன்ற நட்பு நாடுகளுக்கு 39 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் சுட்டினார்.
அமெரிக்கா கடந்த 238 ஆண்டுகளாகப் பல்வேறு அவசரநிலைகளைச் சந்தித்துள்ளது. எந்த அதிபரும் திரு டிரம்ப் போன்று வரி விதிப்புகளைக் கையில் எடுத்ததில்லை என்று திரு நீல் கட்யால் கூறினார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளின் அலுவலகத்தின்படி, சிங்கப்பூர் பொருள்களுக்கான வர்த்தக உபரி S$2.48 பில்லியன் (US$1.9 பில்லியன்) ஆகும். சேவைகளின் வழியாகக் கிடைக்கும் உபரி S$32.78 பில்லியன் (US$25.1 பில்லியன்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

