பெட்டாலிங் ஜெயா: மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்நாட்டுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்கள்.
இருப்பினும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இதற்கு முன் இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.
அது 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரளவில் அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவுக்கு ஏறத்தாழ 537,000 இந்திய சுற்றுப்பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவுக்குச் சென்ற இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைவிட இது 51.6 விழுக்காடு அதிகம்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியச் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு விசா இன்றி செல்லலாம். அங்கு அவர்கள் அதிகபட்சம் 30 நாள்கள் தங்கலாம்.
இந்த ஏற்பாடு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இது இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மலேசிய சுற்றுப்பயண, பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் நைஜல் வோங் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் செய்யும் நேரம் அதிகமில்லை என்றும் அதன் காரணமாக மலேசியாவுக்குச் செல்ல இந்திய சுற்றுப்பயணிகளுக்கு அதிக அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
மலேசியாவுக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் செல்லும் இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பயணிகள் வருகையைக் கண்காணிக்கும் கூட்டணி அமைப்பின் தலைவர் உசாய்டி உடானிஸ் தெரிவித்தார் .
“இந்திய சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கும் விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் சலுகையை வழங்குவது இதுவே சரியான தருணம். குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்ல வசதி படைத்த இந்திய சுற்றுப்பயணிகளையும் மலேசியாவுக்கு ஈர்க்க இது உதவும்.
“இந்திய சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படும் விசா இன்றி பயணம் செய்யும் சலுகை நீட்டிக்கப்பட்டால் அது நன்மை பயக்கும்,” என்றார் அவர்.

