மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கேமராக்கள்

மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கேமராக்கள்

2 mins read
வேகக் கட்டுப்பாட்டை எல்லா வேளைகளிலும் வாகனம் ஓட்டுவோர் கவனத்தில் கொள்ளவேண்டும்: மலேசிய பொதுப் பணித்துறை அமைச்சு
27fa5ec8-3b98-4c47-9085-4e0b75a99aeb
மூன்று ஆண்டுகளுக்கு முன் முழுமையாகத் திறக்கப்பட்ட மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பெட்டாலிங் ஜெயா: நோன்புப் பெருநாளை முன்னிட்டு இல்லங்களுக்குத் திரும்புவோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சு, அந்நாட்டின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) பல கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தியுள்ளது.

வாகனங்களை ஓட்டுவோர் பொறுப்புடன் நடந்துகொள்வதை உறுதிசெய்யவும், விழாக்காலப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சு புதன்கிழமை (மார்ச் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சந்திப்புகளில் சிவப்பு விளக்கு சமிக்ஞையை மீறிச் செல்லுதல், வேகக் கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்களையும் உத்திபூர்வ இடங்களில் வைக்கப்பட்டுள்ள அந்தக் கேமராக்கள் அடையாளங்கண்டு தடுக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளக்கப்படமொன்றில் அமைச்சால் பகிரப்பட்ட கேமராக்கள் உள்ள இடங்கள் வடக்கு, கிழக்கு நோக்கிச் செல்லும் அந்த பெருவிரைவுச் சாலையின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ளன.

பாகோ (146.8வது கிலோமீட்டர்), ஜாசின் (184.2வது கிலோமீட்டர்), அலோ காஜா (214.4வது கிலோமீட்டர்), கஜாங் (301.6வது கிலோமீட்டர்), பெஹ்ராங் (328.8வது கிலோமீட்டர்), தைப்பிங் (204.6வது கிலோமீட்டர்), கம்பார் (299.9வது கிலோமீட்டர்), ஸ்லிம் ரிவர் (375.9வது கிலோமீட்டர்), செபராங் பெராய் செலதான்(166வது கிலோமீட்டர்), பண்டார் பஹாரு (174 வது கிலோமீட்டர்), குவலா மூடா (96.3 கிலோமீட்டர், 97.2 கிலோமீட்டர்) ஆகிய இடங்களில் அவை பொருத்தப்பட்டுள்ளன என்ற விவரங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமலாக்க நடவடிக்கைக்கு மட்டுமல்லாமல், வேகக் கட்டுப்பாட்டை அனைத்து வேளைகளிலும் வாகனம் ஓட்டுவோர் கவனத்தில் கொள்ளவும் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்