ஜோகூரில் சிறுமி கடத்தல் சம்பவம்: சந்தேக நபர் கைது

2 mins read
12457f24-0174-4853-9e0f-358fa3ff2bbc
ஜோகூரில் கைது செய்யப்பட்ட அந்த சந்தேக நபரிடம் பாலியல் தொடர்பான பொருள்கள், சிறார் பாலியல் தொடர்பான ஆபாசப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: ஜோகூரில் சில நாள்கள் காணாமல் போன சிறுமி தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 வயது ஆடவரை மலேசியக் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.

அந்த சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) மீண்டும் கைது செய்யப்பட்டார் என்று ஜோகூர் காவல்துறை ஆணையர் எம் குமார் தெரிவித்தார்.

அவரைக் கைது செய்தபோது கூலாய் நகரில் அவர் வசித்து வந்த இல்லத்தில் பல்வேறு பாலியல் தொடர்பான பொருள்கள் மற்றும் சிறார் பாலியல் தொடர்பான ஆபாசப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறார் பாலியல் துன்புறுத்தல் பொருள்கள் வைத்திருந்ததால் அவர் மீது சிறார் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டப் பிரிவு 10, மற்றும் ஆபாசப் பொருள்கள் வைத்திருந்ததால் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 292 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுவதாக திரு குமார் அறிக்கை ஒன்றில் விளக்கினார்.

சிறார் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டப் பிரிவு 10ன் கீழ் ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று திரு குமார் கூறினார்.

மேலும், குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 292ன் கீழ் ஒருவருக்கு மூன்றாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளைகளின் நடவடிக்கைகள், அவர்களின் மனரீதியிலான வளர்ச்சி, உடல்நலன் ஆகியவற்றைக் கண்காணிப்பதுடன் பாலியல் துன்புறுத்தல் அறிகுறிகள் எதுவும் அவர்களிடம் தென்படுகின்றனவா என்பதைக் கவனிக்குமாறும் பெற்றோரிடம் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்