வாஷிங்டன்: வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆடவர், கிறிஸ்துவ சமயத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டிருந்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) தெரிவித்தார்.
சந்தேக நபர் குறித்து அவரின் குடும்பத்தினர் ஏற்கெனவே சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கவலை தெரிவித்திருந்ததாகத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திரு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டனில் சனிக்கிழமை நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின்போது, கோல் தாமஸ் ஆலன் எனும் 31 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவர், கலிஃபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்.
சிபிஎஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய திரு டிரம்ப், “அவர் முதலில் கிறிஸ்துவ நம்பிக்கையாளராக இருந்தார். ஆனால் பின்னர், கிறிஸ்துவத்திற்கு எதிரானவராக மாறியதும் அவரிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்,” என்று கூறினார்.
துப்பாக்கிச்சூட்டுக்குச் சற்று முன்னதாக, ஆலன் குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது சித்தாந்த அறிக்கையை அனுப்பியதாகச் சட்ட அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். குறிவைக்கப்பட்டவர்களின் பட்டியலில் அரசு உயரதிகாரிகள் பலரின் பெயர்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
மேலும், விருந்து நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இல்லாததை ஆடவர் அந்த அறிக்கையில் கேலி செய்திருந்ததாக அதிகாரி கூறினார்.
அமெரிக்காவின் முக்கியத் தலைவர்கள் பலரும் ஹோட்டலின் பிரம்மாண்டமான அரங்கில் கூடியிருந்த வேளையில் நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு, உயரதிகாரிகளின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுசெய்ய விரைவில் சந்திப்பு நடத்தப்படும் என்று வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் சங்கத் தலைவர் வெய்ஜியா ஜியாங் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அரசு அதிகாரிமீது தாக்குதல் நடத்தியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது, அரசு அதிகாரியைக் கொல்ல முயன்றது உட்பட சந்தேக நபர்மீது திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

