ஜோகூர் பாரு: மலேசியக் கடைத்தொகுதி ஒன்றில் ரமலான் மாதத்தில் சாப்பிட்ட முஸ்லிம் அல்லாத ஆடவர் அறையப்பட்ட சம்பவத்தைக் காவல்துறை அதிகாரிகள் விசாரிப்பதாக உறுதிசெய்துள்ளனர்.
கடைத்தொகுதி ஒன்றில் உணவு உண்ட ஆடவருக்கும் அதைக் குறைகூறிய ஆடவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் எக்ஸ் தளத்தில் பரவி வருவதைக் ஜோகூர் பாரு காவல்துறை அதிகாரிகள் கண்டாதத் தெரிவித்தனர்.
அது தொடர்பில் 21 வயது உள்ளூர் ஆடவர் நேற்று இரவு சுமார் 9 மணிக்குக் காவல்துறையிடம் புகாரளித்தார்.
பிற்பகல் 3.45 மணியளவில் முன்பின் தெரியாத ஆடவர் கடைத்தொகுதியில் உணவு உண்டதற்காகத் தம்மை வலது கன்னத்தில் இரண்டு முறை அறைந்ததாக அந்த 21 வயது நபர் கூறினார்.
தம்மை அறைந்த சந்தேக நபர் தமது சமயம் குறித்து கேட்டதோடு மலேசிய அடையாள அட்டையைக் காட்டும்படி சொன்னதாகவும் அவர் சொன்னார்.
தாக்கப்பட்டவர் அடையாள அட்டையைக் காட்ட மறுத்தபோது சச்சரவு மூண்டதாக நம்பப்படுகிறது.
பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்றும் வன்முறையைத் தவிர்க்கும்படியும் மலேசியக் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முஸ்லிம் ஆடவர் பொது இடத்தில் இளையரை அறைந்தது இஸ்லாம் போதனைக்கு எதிரானது என்றும் சட்டத்தை மீறும் செயல் என்றும் மாநில முஸ்லிம் சமய விவகாரங்களின் குழுத் தலைவர் முகமது ஃபாரிட் முகமது காலிட் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தவறுகளைத் தட்டிகேட்பது பாராட்டுக்குரியது என்றாலும் உண்மை என்ன என்பதை முதலில் உறுதிப்படுத்தவேண்டும் என்றார் அவர்.
“அடுத்தவர்களைத் தண்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. யாருக்காவது புகார் ஏதும் இருந்தால் எங்களிடம் கூறலாம். நாங்கள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம்,” என்று திரு ஃபாரிட் குறிப்பிட்டார்.

